செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட்- இந்திய அணிக்கு 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

Published On 2019-06-05 13:20 GMT   |   Update On 2019-06-05 13:20 GMT
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு 228 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
சவுத்தாம்ப்டன்:

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று சவுத்தாம்டனில்  நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து  இந்திய அணி முதலில் பந்து வீசியது.

தொடக்க ஆட்டக்காரராக ஹஷிம் அம்லா மற்றும் குவின்டன் டி காக் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர்.  

இதனால் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹஷிம் அம்லா 6 ரன்களுக்கும், குவின்டன் டி காக் 10 ரன்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் இந்திய சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் சேர்த்தது. அதிக பட்சமாக கேப்டன் டு பிளசிஸ் 38 ரன்களும், ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 42 ரன்களும் குவித்தனர்.

இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 228 என் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
Tags:    

Similar News