செய்திகள்

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வெற்றி

Published On 2019-05-28 21:24 GMT   |   Update On 2019-05-28 21:24 GMT
வங்காளதேசத்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், டோனி சதம் அடித்து அசத்தினர்.
கார்டிப்:

10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சி ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று இந்திய அணி, வங்காளதேசத்தை கார்டிப்பில் எதிர்கொண்டது. பயிற்சி ஆட்டம் என்பதால் இரு அணிகளிலும் தலா 14 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் மோர்தசா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அங்கு நிலவிய மேகமூட்டமான சூழல் தொடக்கத்தில் பந்து வீச்சுக்கு உதவியது. ஷிகர் தவான் ஒரு ரன்னிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். ஆனால் போக போக ஆடுகளத்தன்மை பேட்டிங்குக்கு உகந்ததாக மாறியது. கேப்டன் விராட் கோலி தனது பங்குக்கு 47 ரன்கள் (46 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். விஜய் சங்கர் (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.


102 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை (22 ஓவர்) பறிகொடுத்து இந்திய அணி தடுமாறிய நிலையில் 5-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலும், டோனியும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தினர். அவ்வப்போது பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட இவர்கள் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினர். அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல் சதம் அடித்தார். 4-வது பேட்டிங் வரிசையில் யார்? ஆடுவார் என்ற புதிருக்கு ராகுலின் பேட்டிங் விடை அளிப்பதாக அமைந்தது.

அணியின் ஸ்கோர் 266 ரன்களாக உயர்ந்த போது லோகேஷ் ராகுல் 108 ரன்களில் (99 பந்து, 12 பந்து, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார். மறுமுனையில் டோனி அதிரடியில் பின்னியெடுத்தார். அபு ஜெயத்தின் பந்துவீச்சில் சிக்சர் அடித்து மூன்று இலக்கத்தை கடந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சதம் அடித்த டோனி 113 ரன்களில் (78 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்), ஷகிப் அல்-ஹசனின் சுழலில் ‘கிளன் போல்டு’ ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 21 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 7 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 11 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த வங்காளதேச அணி மொத்தம் 9 பவுலர்களை பயன்படுத்தியது கவனிக்கத்தக்கது.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 90 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News