செய்திகள்

நான் உயிரோடுதான் இருக்கிறேன்: வதந்திகளை நம்பாதீர்- சனத் ஜெயசூர்யா

Published On 2019-05-27 11:52 GMT   |   Update On 2019-05-27 11:52 GMT
சனத் ஜெயசூர்யா இறந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் பரவிய செய்தியை பார்த்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கவலையடைந்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 1996-ம் ஆண்டுக்கு முன்புவரை 50 ஓவரில் 225 ரன்களுக்கு மேல் அடித்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. பெரும்பாலான அணிகள் முதல் 25 ஓவரில் 100 ரன்கள்தான் அடிக்கும். 1996-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இலங்கை அணி விஸ்வரூபம் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது.

இதற்கு முக்கிய காரணம் தொடக்க வீரர் சனத் ஜெயசூர்யாதான். அப்போது முதல் 15 ஓவர் ‘பவர்பிளே’ என்று அழைக்கப்படும். இந்த 15 ஓவருக்கு இரண்டு வீரர்கள் மட்டுமே பவர்பிளே-யின் உள்வட்டத்திற்கு வெளியே நிற்க முடியும். இந்த ஓவர்களில் சனத் ஜெயசூர்யா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார். இதனால் இலங்கை முதல் 15 ஓவரிலேயே பெரும்பாலான போட்டிகளில் 100 ரன்னைத் தாண்டியது.

அதன்பிறகுதான் தொடக்க பேட்ஸ்மேன்கள் அதிரடி பேட்ஸ்மேன்களாக மாறினார்கள். பவர்பிளே என்றாலே ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருவது சனத் ஜெயசூர்யதான்.

49 வயதாகும் இவர் கனடாவில் நடந்த கார் விபத்தில் இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது. இது கிரிக்கெட் வீரர்களை கவலைக்குள்ளாக்கிறது.

பின்னர் இந்த செய்தி வதந்தி எனத் தெரியவந்தது. இந்நிலையில் அஸ்வின் இந்த வதந்தி செய்தி குறித்து மிகவும் கவலையடைந்துள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘இந்த செய்தி உண்மையா? எனக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்தது. ஆனால், ட்விட்டரில் இதுபோன்ற செய்தியை பார்க்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். பின்னர் அஸ்வினுக்கு ஒருவர் அது வதந்தி என பதில் அளித்துள்ளார்.

‘‘எனது உடல் ஆரோக்கியம் குறித்து சில வலைத்தளங்கள் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. கார் விபத்தில் நான் இறந்து விட்டதாக கூறப்படும் செய்தியை புறக்கணியுங்கள். நான் கனடாவுக்கு செல்லவில்லை. இலங்கையில்தான் இருக்கிறேன்’’ என்று ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
Tags:    

Similar News