செய்திகள்

உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக வரலாற்றை மாற்றி எழுதுவோம்: இன்சமாம் உல் ஹக்

Published On 2019-05-26 13:49 GMT   |   Update On 2019-05-26 13:49 GMT
உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதுவோம் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே ஆஷஸ் தொடர் மிகப்பெரியதாக கருதப்படும்.

அதன்பின் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிதான். இரு அணி ரசிகர்களும் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள். உலகக்கோப்பை போன்ற தொடரைக் காட்டிலும் இந்த போட்டியிலும் வெற்றி பெற்றாலே போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 6 போட்டிகளில் பாகிஸ்தான் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இந்த வரலாற்றை மாற்றி எழுதுவோம் என்று பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவரான இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றாலே போதும் என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர்.

தொடர் தோல்விக்கு இந்த உலகக்கோப்பையில் முற்றுப்புள்ளி வைப்போம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்தியாவை வீழ்த்துவதை போல் மற்ற அணிகளையும் வீழ்த்தி சாத்தியக்கூறு பாகிஸ்தான் அணியிடம் உள்ளது.



15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்வது எளிது என ரசிகர்கள் நினைக்கிறார்கள். அது ஒன்றும் அப்படி அல்ல. ஏனென்றால், ஏகப்பட்ட நெருக்கடி உள்ளது. உதாரணமாக வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், முகமது அமிர், ஜுனைத் கான், உஸ்மான் ஷின்வாரி போன்ற வீரர்கள் பட்டியலில் இருந்தனர்.’’ என்றார்.

உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் கடைசி நேரத்தில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டனர். இதனால் இன்சமாம் உல் ஹக் மீது கடும் விமர்சனம் எழும்பியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News