செய்திகள்

என்னை கண்டு எதிரணி பவுலர்கள் இன்னும் நடுங்குகிறார்கள் - கெய்ல் சொல்கிறார்

Published On 2019-05-22 18:54 GMT   |   Update On 2019-05-22 18:54 GMT
தன்னை கண்டு எதிரணி பவுலர்கள் இன்னும் நடுங்குகிறார்கள் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் கெய்ல் கூறியுள்ளார்.
ஆன்டிகுவா:

5-வது முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் 39 வயதான கிறிஸ் கெய்ல் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் எனது தலைக்கு குறி வைக்கிறார்கள். அதனால் முந்தைய போட்டிகளை போன்று இந்த உலக கோப்பை எனக்கு எளிதாக இருக்காது. அப்போது நான் அதிரடியாக ஆடி மிரட்டினேன். ஆனாலும் அவர்களுக்கு (பவுலர்கள்) என் மீது இன்னும் பயம் இருக்கும். இந்த ‘யுனிவர்ஸ் பாஸ்’ (கெய்லின் பட்டப் பெயர்) என்ன செய்வார், அவரது திறமை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள். இவர்தான் உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன் என்பது எதிரணி பந்து வீச்சாளர்களின் மனதில் நிச்சயம் இருக்கும்.

கேமராவின் முன் கேட்டால், கெய்லை கண்டு பயமா? இல்லவே இல்லை என்பார்கள். இதையே தனியாக கேட்டால், ‘கெய்ல் எப்போதும் கெய்ல் தான்’ என்று சொல்வார்கள். இதை நான் ரசித்து மகிழ்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான போராட்டத்தை நான் எப்போதும் உற்சாகமாக அனுபவித்து ஆடுகிறேன். இது, சில சமயம் ஒரு பேட்ஸ்மேனாக, எனக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கிறது. இத்தகைய சவால்கள் எனக்கு பிடித்திருக்கிறது.

ஐ.பி.எல். போட்டி ஓரளவு நன்றாக அமைந்தது. இப்போது நல்ல பார்மில் உள்ளேன். உலக கோப்பை நீண்ட தொடர். முடிந்தவரை சூழலை நன்கு கணித்து, சரியான மனநிலையுடன் ஆட வேண்டும் என்பதே எனது நோக்கம்.

இவ்வாறு கெய்ல் கூறினார்.

ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கெய்ல் 39 சிக்சர் உள்பட 424 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News