செய்திகள்

இங்கிலாந்து மீண்டும் 351 ரன்கள்: பாகிஸ்தான் 54 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது

Published On 2019-05-20 11:21 GMT   |   Update On 2019-05-20 11:21 GMT
லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 54 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து 4-0 எனத் தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

2-வது, 3-வது மற்றும் நான்காவது போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் இரண்டு அணிகளும் 300 ரன்களுக்கு மேல் குவித்தனர். இங்கிலாந்து இரண்டு முறை சேஸிங் செய்தது. ஒருமுறை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 73 பந்தில் 84 ரன்களும், மோர்கன் 64 பந்தில் 76 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. கிறிஸ் வோக்ஸ் தொடக்கத்தில் அபாரமாக பந்து வீச பாகிஸ்தான் 6 ரன்கள் அடிப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் உடன் கேப்டன் சர்பராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.



பாபர் ஆசம் 80 ரன்கள் சேர்த்தார். சர்பராஸ் அகமது 80 பந்தில் 97 ரன்கள் குவித்து சதத்தை தவறவிட்டார். சர்பராஸ் அகமது ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் 31.5 ஓவரில் 193 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த வீரர்கள் முடிந்த அளவிற்கு அடித்து விளையாடினார்கள். ஆசிப் அலி 22 ரன்னும், இமாத் வாசிம் 25 ரன்களும், முகமது ஹஸ்னைன் 28 ரன்களும் சேர்க்க பாகிஸ்தான் 46.5 ஓவரில் 297 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இதனால் இங்கிலாந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 4-0 எனவும் கைப்பற்றியது. இந்தத் தொடரில் 8 இன்னிங்சில் 7 முறை 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News