செய்திகள்

இது ஆல்-ரவுண்டர்களுக்கான உலகக்கோப்பை: கிளைவ் லாய்டு சொல்கிறார்

Published On 2019-05-17 10:04 GMT   |   Update On 2019-05-17 10:04 GMT
இங்கிலாந்தில் நடைபெற இருப்பது ஆல்-ரவுண்டர்களுக்கான உலகக்கோப்பை என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிளைவ் லாய்டு தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் சாதிக்க ஒவ்வொரு அணியும் தீவிரமாக உள்ளன. இதற்கிடையே உலகக்கோப்பை போட்டி தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாய்டு கூறியதாவது:-

உலகக்கோப்பை போட்டி நடக்கும் இங்கிலாந்தில் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளன. இது பந்து வீச்சாளர்களுக்கு சிறிய போராட்டத்தை அளிக்கும். இந்த உலக கோப்பை ஆல்-ரவுண்டர்களுக்கான போட்டி தொடராக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து அணியிலும் தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். இதனால்தான் ஆல்-ரவுண்டருக்கான உலகக்கோப்பை போட்டி என்று நம்புகிறேன்.

இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடும் என்று நானும் நம்புகிறேன். உலகம் முழுவதும் பல்வேறு தொடர்களில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீசின் முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் சிறந்த வீரர்கள் பலரை இழந்து இருக்கிறோம். தற்போது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.



கடந்த சில வருடங்களாக இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அந்த அணி சம பலத்துடன் இருக்கிறது. அவர்கள் பெரும் சவாலாக இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிளைவ் லாய்ட்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 1975, 1979-ம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்றது. 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
Tags:    

Similar News