செய்திகள்

டோனி உலககோப்பையை மீண்டும் வென்று கொடுப்பார் - கபில்தேவ் நம்பிக்கை

Published On 2019-04-24 11:37 GMT   |   Update On 2019-04-24 11:37 GMT
டோனி இந்த முறையும் உலக கோப்பையை பெற்று தருவார் என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MSDhoni #KapilDev
புதுடெல்லி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய சேவைகளை செய்தவர் டோனி. அவரை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. அவர் எவ்வளவு காலம் விளையாட விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது. உடல் தகுதியை பொறுத்து அவர் முடிவு செய்ய வேண்டிய வி‌ஷயம்.

ஆனால் டோனி அளவுக்கு நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்ட இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை என்றே சொல்வேன். அவரை மதிக்க வேண்டும். அதோடு அவரை வாழ்த்தவும் வேண்டும்.

டோனி இந்த முறையும் உலக கோப்பையை பெற்று தருவார் என்று நம்புகிறேன். தற்போது உள்ள இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. ஆனால் உலககோப்பையை வெல்வது எளிதல்ல. அணியாக ஆடவேண்டும். காயம் ஏற்பட்டால் பார்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் நிச்சயம் இந்த அணி உலககோப்பையை வெல்லும்.

உலககோப்பை போட்டிக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வு குழுவினர் செய்து உள்ளனர். நாம் அதனை மதிக்க வேண்டும். ரி‌ஷப் பந்துக்கு பதிலாக அவர்கள் தினேஷ் கார்த்திக்கை எடுத்துள்ளார்கள். அப்படியென்றால் அது சரியாகத்தான் இருக்கும். நாம் தேர்வு குழுவினரின் சிறந்த பணியை நம்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு கபில்தேவ் தான் முதல் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1983-ம் ஆண்டு அவரது தலைமையிலான அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கோப்பையை வென்றது.

28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது உலககோப்பையை பெற்றுக் கொடுத்தார். 2011-ம் ஆண்டு அவரது தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது.

தற்போது விராட்கோலி தலைமையில் இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. டோனி ஆட்டத்தை நிறைவு செய்வதில் தொடர்ந்து வல்லவராக இருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.

12-வது உலககோப்பை போட்டி மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. #MSDhoni #KapilDev
Tags:    

Similar News