செய்திகள்

பெண்கள் டி20 கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2019-02-01 14:21 GMT   |   Update On 2019-02-01 14:21 GMT
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி 2-வது போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றியடைந்தனர். #PAKWvWIW
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2-வது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் 12 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டோட்டின் பந்தை எதிர்கொண்டார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது மற்றும் 3-வது பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. 4-வது மற்றும் 5-வது பந்தில் இமாலய சிக்ஸ் விளாசினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் அடித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 18 ரன்கள் குவித்தது.

பின்னர் 19 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் அலியா ரியாஸ், இராம் ஜாவித் ஆகிய வீராங்கனைகள் களம் இறங்கினர். செல்மான் பந்து வீசினார். முதல் பந்திலேயே அலியா ரியாஸ் ஆட்டமிழந்தார். 2-வது பந்தில் இராம் ஜாவித் 1 ரன் அடித்தார். அடுத்த பந்தில் நிடா தார் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றியது.

3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 3-ந்தேதி நடக்கிறது.
Tags:    

Similar News