செய்திகள்

ஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி

Published On 2019-01-22 12:24 GMT   |   Update On 2019-01-22 12:24 GMT
ஆல்-ரவுண்டர் இல்லையென்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருடன் இந்திய அணி களம் இறங்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #NZvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இத்தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து பேசி சர்ச்சைக்குள்ளானார். இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

முதல் போட்டியில் இந்தியா புவனேஸ்வர் குமார், முகமது ஷமி மற்றும் கலீல் அகமது ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. 2-வது போடடியில் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் களம் இறங்கியது.

ஆனால் 3-வது போட்டியில் ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கர் களம் இறங்கினார். இதனால் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தத் தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உலகக்கோப்பையில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கும் திட்டம் ஏதும் வைத்துள்ளீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


கலீல் அகமது

அப்போது ஆல்-ரவுண்டர் இல்லையென்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருடன் இந்தியா களம் இறங்கும் என்று தெரிவித்தார். மேலும், இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘விஜய் ஷங்கர் அல்லது ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு ஆல்-ரவுண்டர் அணியில் இடம்பெறாவிடில் மட்டுமே, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்குவதில் அர்த்தம் இருக்கும்.

ஏனென்றால், ஆல்-ரவுண்டரால் புதுப்பந்தில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீச முடியும். அதன்பின் முன்னணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இணைந்து அவர், 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச வேண்டிய அவசியம் இருக்காது.

நான் எப்போதெல்லாம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினேனோ, அப்போதெல்லாம் ஹர்திக் பாண்டியா அணியில் இருந்திருக்கமாட்டார். அதனால் ஆல்-ரவுண்டர் அணியில் இருந்தால், முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமற்ற ஆடுகளத்தைத் தவிர மற்ற இடங்களில் 3-வது வேகப்பந்து வீச்சு குறித்து யோசித்தது கிடையாது.


முகமது சிராஜ்

ஆல்-ரவுண்டரை பொறுத்துதான் பந்துவீச்சு கலவை இருக்கும். உலகின் வலிமையான அணிகளை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் குறைந்தது இரண்டு ஆல்-ரவுண்டர் வைத்திருப்பார்கள். சில சமயம் மூன்று ஆல்ரவுண்டர்கள் கூட இருப்பார்கள். அது அவர்களுக்கு ஏராளமான பந்துவீச்சு ஆப்சனை வழங்கும்’’ என்றார்.
Tags:    

Similar News