செய்திகள்

விஜய் ஹசாரே டிராபி - டெல்லியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை

Published On 2018-10-20 18:37 GMT   |   Update On 2018-10-20 18:37 GMT
விஜய் ஹசாரே டிராபியின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது. #VijayHazareTrophy
பெங்களூரு:

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இதில் லீக், கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகள் முடிந்துள்ளன.
 
இந்நிலையில் பெங்களூருவில் நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின.
 
டாஸ் ஜெயித்த மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, டெல்லி அணி களமிறங்கியது.

அந்த அணியின் ஹிம்மத் சிங் 41 ரன்களும், துருவ் ஷோரே 31 ரன்களும், சுபோத் பாதி 25 ரன்களும், பவன் நெகி 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், டெல்லி அணி 45.4 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



மும்பை அணி சார்பில் தவால் குல்கர்னி, ஷிவம் துபே 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

டெல்லி அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தத்தளித்தது.
அதன்பின் ஜோடி சேர்ந்த சித்தேஷ் லால் மற்றும் ஆதித்யா தரே ஆகியோர் 100 ரன்கள் ஜோடி சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

ஆதித்யா தரே 71 ரன்களும், சித்தேஷ் லால் 48 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், மும்பை அணி 35 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், விஜய் ஹசரே கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக ஆதித்ய தரே தேர்வு செய்யப்பட்டார். #VijayHazareTrophy
Tags:    

Similar News