செய்திகள்

மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பின்பு கூட்டணி அரசின் ஆயுட்காலம் தெரியவரும்- எடியூரப்பா

Published On 2019-06-10 02:11 GMT   |   Update On 2019-06-10 02:11 GMT
குமாரசாமி தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளார். மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பின்பு இந்த கூட்டணி அரசின் ஆயுட்காலம் தெரியவரும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக மந்திரிசபையில் காலியாக உள்ள 3 இடங்களை நிரப்ப முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்து உள்ளார். அதன்படி 3 பேர் புதிய மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழா வருகிற 12-ந் தேதி நடக்க உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா யாதகிரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குமாரசாமி தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளார். ஏற்கனவே காங்கிரசில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பின்பு இந்த கூட்டணி அரசின் ஆயுட்காலம் தெரியவரும். கிராம தரிசனம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் தங்குவதாக குமாரசாமி கூறியுள்ளார். இதனால் என்ன பயன். விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டு அறிந்துள்ளேன்.

ஜிந்தால் நிறுவனத்திற்கு குறைந்த விலையில் 3,667 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இந்த அரசு லஞ்சம் பெற்றுள்ளது. ஒரு ஏக்கர் நிலம் ரூ.1.22 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது. இதை கண்டித்து நாங்கள் பெங்களூருவில் 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த விஷயத்தில் அரசு தனது முடிவை வாபஸ் பெறாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

கர்நாடகத்தில் அரசு நிர்வாகம் முழுவதுமாக முடங்கிவிட்டது. மக்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். சமூக பாதுகாப்பு நிதிகள் எதையும் மாநில அரசு விடுவிக்கவில்லை. ஆயிரக்கணக்கான வயதானவர்கள், ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் பிரச்சினை கடுமையாக உள்ளது.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்கள் சரியாக செயல்படாமல் உள்ளன. கிராம வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்காவிட்டால் இன்னும் ஓரிரு நாட்களில் பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விதான சவுதா முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்துவார்கள்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 
Tags:    

Similar News