செய்திகள்

5 துணை முதல்-மந்திரிகள் உள்பட ஆந்திராவில் 25 மந்திரிகள் பதவி ஏற்றனர்

Published On 2019-06-08 09:18 GMT   |   Update On 2019-06-08 09:18 GMT
ஆந்திராவில் இன்று 5 துணை முதல்-மந்திரிகள் உள்பட 25 மந்திரிகளுக்கு கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அமராவதி:

ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை தோற்கடித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக கடந்த மாதம் 30-ந்தேதி பதவி ஏற்றார்.

ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அமராவதியில் உள்ள தனது இல்லத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அப்போது 5 துணை முதல்-மந்திரிகளை நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும், பட்டியல் இனம், பழங்குடி இனம், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், காபு சமூகம் ஆகிய 5 சாதிகளில் இருந்து ஒருவர் வீதம் 5 துணை முதல்-மந்திரிகள் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

5 துணை முதல்-மந்திரிகள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்பு விழா இன்று அமராவதியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று கவர்னர் நரசிம்மன் ஐதரபாத்தில் இருந்து அமராவதிக்கு வந்தார். ஓட்டலில் தங்கி இருந்த கவர்னர் நரசிம்மனை நேற்று இரவு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார்.

அப்போது தனது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 25 பேர் பெயர் பட்டியலை கவர்னரிடம் கொடுத்தார். இதில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் 60 சதவீதம் பேர் பிற்படுத்தபட்டோர், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த 7 பேர் மந்திரிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

19 பேர் முதல் முறையாக மந்திரி ஆகிறார்கள். 6 பேர் ஜெகன்மோகன் ரெட்டி தந்தை ராஜசேகர் ரெட்டியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள்.

ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை 8.49 மணிக்கு அமராவதியில் உள்ள தலைமை செயலகத்துக்கு சென்று பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவர் பூஜைகள் செய்து வழிபட்டார். அதன்பின்னர் 5 துணை முதல்-மந்திரிகள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்பு விழா தலைமை செயலகத்தில் நடந்தது.


5 துணை முதல் - மந்திரிகள் உள்பட 25 மந்திரிகளுக்கு கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முன்னதாக தற்காலிக சபாநாயகராக சம்பன்கி வெங்கடசின்ன அப்பல நாயுடு தேர்ந்தெடுக்கட்டார். இவர் 4-வது முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை ரோஜாவுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், நேற்று வெளியான மந்திரிகள் பெயர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

அவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Tags:    

Similar News