செய்திகள்

நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்.. 8 கி.மீ தோளில் சுமந்துச் சென்ற சிஆர்பிஎப் வீரர்கள்

Published On 2019-06-08 05:31 GMT   |   Update On 2019-06-08 05:31 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை அப்பகுதி சிஆர்பிஎப் வீரர்கள் 8 கி.மீ தங்கள் தோளில் சுமந்துச் சென்றுள்ளனர்.
ராய்ப்பூர்:

பயங்கரவாதிகள் மற்றும் நக்சல்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் ஒன்று சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டம். இங்கு ஒரு கிராமத்தில் 13 வயது சிறுவனுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் எவ்வித மருத்துவ வசதியும், சரியான சாலை வசதியும் இல்லாததால் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்.

இது குறித்து  அப்பகுதியில் எப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சிறுவனுக்கு உதவ வேண்டும் என எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி சிறப்பான செயலை செய்துள்ளனர்.

அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்ற சிஆர்பிஎப் வீரர்கள், சிறுவனை பார்த்தபோது எழுந்து நடக்கக்கூட முடியாமல்  தவித்துள்ளான். இதையடுத்து அச்சிறுவன் படுத்திருந்த கயத்துக் கட்டிலை ஒரு கம்பினில் இறுக்கமாகக் கட்டினர்.



பின்னர் 4 வீரர்கள் மாறி மாறி  தோளில் சுமந்து 8 கி.மீ தாண்டி இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர். நடந்து செல்லும்போதும் கடமை  உணர்வை தவறாமல் வழியில் வெடிகுண்டுகள் இருக்கின்றனவா என செக் செய்தவாறு சென்றனர்.

இவை அனைத்தும் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதனை அப்பகுதியில் இருக்கும் ஒருவர் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  

Tags:    

Similar News