செய்திகள்

உயிர் பலிவாங்கும் வைரஸ் காய்ச்சல் - கேரளாவை மிரட்டும் ‘நிபா’

Published On 2019-06-05 06:37 GMT   |   Update On 2019-06-05 06:37 GMT
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் பரவும் தன்மை கொண்ட நிபா வைரஸ் காய்ச்சல் கேரள மக்களை மீண்டும் பீதிக்குள்ளாக்கி உள்ளது.
கடந்த ஆண்டு கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியதில் 17 பேர் உயிர் இழந்தனர். அவர்களில் ஒருவர், நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்சு லினி என்பது வேதனையானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கொச்சியில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி பொதுமக்களை மிரட்டி வருகிறது.

நிபா வைரஸ் 1998-ம் ஆண்டு மலேசியாவில் உள்ள காம்பங் சுங்காய் நிபா என்ற இடத்தில் தான் முதன்முதலில் தனது கோர முகத்தை காட்டியது. இங்குள்ள பன்றி பண்ணைகளில் பன்றிகளை பராமரிக்கும் வேலை பார்த்த தொழிலாளர்கள் சிலர் புது விதமான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர்களில் பலர் உயிர் இழந்ததால் இது மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. இதுபற்றி பரிசோதனை செய்தபோது அது வவ்வால், பன்றிகள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. முதன்முதலில் நிபா என்ற இடத்தில் இந்த நோய் கண்டு பிடிக்கப்பட்டதால் நிபா வைரஸ் காய்ச்சல் என்ற பெயர் வந்தது.

அதன்பிறகு 2001-ல் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. 66 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 45 பேர் உயிரிழந்தனர்.

2011-ல் வங்காள தேசத்திலும் இந்த நோய் பரவியது. அங்கு 56 பேர் நிபாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 50 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு தான் 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் போன்றவை நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் தோன்றும் முதல் அறிகுறிகளாகும். 10 முதல் 12 நாட்களுக்கு பிறகே நிபாவின் தாக்குதலின் தீவிரம் அதிகரிக்கும். அப்போது காய்ச்சலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். மேலும் நோயாளிகளுக்கு மயக்க நிலையும் ஏற்படும். இதற்கு காரணம் நிபா வைரஸ் மூலமாக மூளை பாதிக்கப்படுவது தான்.

நிபா வைரஸ் அதிகமாக வவ்வால்கள் மூலமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. வவ்வால் கடித்த பழங்களை மனிதர்கள் சாப்பிடுவதன் மூலம் அவர்கள் நிபா வைரசால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வைரஸ் கிருமிகள் தாக்கிய பழங்களை சாப்பிடும் விலங்குகள் மூலமும் இந்நோய் பரவுகிறது.

பறவைகள், வவ்வால்கள் கடித்து விட்டு போட்ட பழங்களை சாப்பிடக்கூடாது. காரணம் பழங்களில் உள்ள இனிப்பு சுவை காரணமாக வைரஸ் கிருமி அந்த பழங்களில் ஒன்று முதல் 3 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். அந்த பழங்களை நாம் சாப்பிடும்போது நிபா வைரஸ் உடனடியாக நமது உடலில் பரவி விடுகிறது.

நிபா வைரஸ் தாக்கிய ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் இது பரவும் தன்மை கொண்டது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர் இருமலின் போதும், தும்மலின் போதும் இந்த நோய் மற்றவர்களுக்கு பரவும். இதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முககசவம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்வது அவசியம்.

மேலும் உணவு சாப்பிடும் முன்பு கைகளை தூய்மையாக கழுவி பராமரிப்பதன் மூலமாகவும் இந்த நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.



நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பு சதவீதம் 74.5 சதவீதமாக உள்ளது என்பது இந்த நோயின் கொடிய பாதிப்பை பற்றி நமக்கு உணர்த்துகிறது.

வவ்வால்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள பனை மரங்களில் இருந்து இறக்கப்படும் பதநீர், கள் ஆகியவற்றையும் பொது மக்கள் குடிக்க கூடாது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல வவ்வால்கள் வசிக்கும் கிணறுகளில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் உபயோகிப்பதன் மூலமும் நிபா வைரஸ் பரவுகிறது. தண்ணீரை சூடாக்கி குடிப்பதன் மூலம் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

நிபா வைரஸ் 22 முதல் 39 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ண நிலையில் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் கிருமிகள் காற்றின் மூலம் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை. அதேசமயம் நோயாளிகளுடன் நெருங்கி பழகுபவர்கள், அவர்களுடன் ஒரே அறையில் வசிப்பவர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர் இருமும்போது மற்றவர்களுக்கும் நோய் தாக்குதல் உண்டாகிறது.

நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மரணம் அடையும்போது அவர்களது உடலை தொடுவது, கட்டிப்பிடித்து அழுவது போன்றவைகளில் உறவினர்கள் ஈடுபடும்போது அவர்களுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற செயல்களை தவிர்ப்பதன் மூலம் நம்மை காத்துக் கொள்ள முடியும்.

நிபா வைரசுக்கு முதல் அறிகுறி காய்ச்சல் தான் என்றாலும் எல்லா காய்ச்சலும் நிபா காய்ச்சலாக இருக்க முடியாது. ஆனாலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ள உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது தான் இதற்கு சிறந்த தீர்வாக உள்ளது. அதுவும் ரத்த மாதிரி புனேவுக்கு அனுப்பி தான் நிபா வைரஸ் தாக்குதல் உள்ளதா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது.

எனவே காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தாமதம் செய்யாமல் தங்கள் ரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவரை வழங்கி உள்ளனர்.

நிபா காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க வங்காளதேசத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 8 குரங்குகள் பயன்படுத்தப்பட்டன. நிபா வைரசை இந்த குரங்குகளின் உடலில் செலுத்தியபோது அவைகளின் உடல் வெப்பநிலை இயல்பை காட்டிலும் அதிகளவு அதிகரித்தது. மேலும் அவை மூச்சு விடவும் மிகவும் சிரமப்பட்டன. சோர்வாக சுருண்டு படுத்துக் கொண்டன. இதன் மூலம் நிபா வைரஸ் பாதிப்புகள் பற்றி முழுமையாக கண்டறியப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய வைரஸ் நோய் கூறுஆய்வு மையம் நிபா வைரசை கட்டுப்படுத்த மருந்துகளை கண்டு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மாநில சுகாதாரத்துறை ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்துகளை வாங்கி வழங்கியது. அதன் மூலமே நிபா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த முறையும் ஆஸ்திரேலியாவில் இருந்து நோய் தடுப்பு மருந்துகளை வாங்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மந்திரி சைலஜா கூறி உள்ளார்.

Tags:    

Similar News