செய்திகள்

கூட்டணியாக செயல்படவில்லை- அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி பாய்ச்சல்

Published On 2019-06-04 11:37 GMT   |   Update On 2019-06-04 11:37 GMT
பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தங்களுடன் கூட்டணியாக செயல்படவில்லை என்றும், அகிலேஷ் கட்சியினர் துரோகம் செய்து விட்டனர் என்றும் மாயாவதி குற்றம்சாட்டினார்.
லக்னோ:

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

சுமார் 20 ஆண்டுகளாக உத்தரபிரதேச அரசியலில் பரம எதிரிகளாக இருந்த அவர்கள் இருவரும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைத்தனர்.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. பாரதிய ஜனதாவை முழுமையாக தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக மாயாவதியும், அகிலேசும் காங்கிரஸ் கட்சியை கூட தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.

ஆனால் தேர்தல் முடிவுகள் அவர்களது கனவுகளை சிதைக்கும் வகையில் படுதோல்வியை கொடுத்தது. பாரதிய ஜனதா கட்சி 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 இடங்கள், சமாஜ்வாடி கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

தேர்தல் தோல்வியால் மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி உள்ளன. பாரதிய ஜனதாவை வலுவாக எதிர்க்க முடியாமல் போனதற்கு கூட்டணியில் ஒருமித்த நிலை உருவாகாமல் போனதே காரணம் என்று இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

மேலும் தேர்தலில் யாதவர்களும், தலித் இனத்தவர்களும் ஒன்றுபட்டு செயல்படவில்லை என்ற அதிருப்தியும் இரு தலைவர்களிடமும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக யாதவர்கள் தனது வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று மாயாவதி வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் கடந்த வார இறுதியில் டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து மாயாவதி ஆலோசனை நடத்தினார். அப்போது மாயாவதி பேசும்போது கூறியதாவது:-

சமாஜ்வாடி கட்சியுடன் நாம் அமைத்த கூட்டணி பலன் இல்லாமல் போய் விட்டது. யாதவர்கள் நமக்கு ஓட்டு போடவில்லை. ஆனால் நாம் அவர்களது கட்சி வேட்பாளர்களுக்கு தவறாமல் ஓட்டு போட்டோம். அகிலேஷ் கட்சியினர் நமக்கு துரோகம் செய்து விட்டனர்.

எனவே இனி நாம் தனித்து போட்டியிட வேண்டும். நமது கட்சி இனி யாரையும் சார்ந்து இருக்க கூடாது. அதற்கு நமது தொண்டர்கள் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் விரைவில் 11 சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த 11 இடங்களிலும் நாம் நமது செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டும். அதுபோல 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும். இப்போதே அதற்கு தொண்டர்கள் தயாராகுங்கள்.

பாராளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 30 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சமாஜ்வாடி கட்சியினர் ஒத்துழைக்காததால் முக்கிய தொகுதிகளில் நாம் வெற்றியை இழந்து உள்ளோம். அகிலேஷ் யாதவால் நமக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி இல்லை.

தோல்விக்கு அகிலேஷ் யாதவ்தான் காரணமாகும். சமாஜ்வாடி கட்சியினர் வலுவாக இருக்கும் பகுதிகளில் கூட அவர்கள் வேட்பாளர் வெற்றி பெற இயலவில்லை. இதன் மூலம் யாதவர்களின் வாக்குகள் பாரதிய ஜனதாவுக்கு மாறி இருப்பது தெரிய வந்துள்ளது.

சமாஜ்வாடி கட்சியினர் ஒரு தொகுதியில் கூட கூட்டணி தர்மபடி செயல்படவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியினரை கூட்டணி அங்கமாக கூட அவர்கள் பார்க்கவில்லை. அகிலேஷ் யாதவ் இதில் கவனக்குறைவாக இருந்து விட்டார்.

அவரால் அவரது மனைவியை கூட வெற்றி பெற வைக்க இயலவில்லை. நமது கூட்டணிக்கு இடையூறு செய்த சிவபால் யாதவை அவர்கள் மீண்டும் சேர்த்துள்ளனர். இதை எந்த விதத்திலும் ஏற்க இயலாது.

எனவே இனி நாம் நமது சொந்த காலில் நிற்க வேண்டும். அதற்கேற்ப கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துங்கள்.

இவ்வாறு மாயாவதி பேசினார்.

மாயாவதியின் தன்னிச்சையான இந்த முடிவால் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கூட்டணி உடைந்துள்ளது. கூட்டணியில் ஏற்பட்ட இந்த பிளவு அகிலேஷ் யாதவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுபற்றி அவரிடம் கருத்து கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியவில்லை. மாயாவதி கூட்டணியை முறித்துக்கொண்டால் தனித்து போட்டியிட தயார்” என்று தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணி 5 மாதங்களில் உடைந்து விட்டதால் அவர் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

உத்தரபிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள 11 சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் கைகோர்க்கலாமா? என்று அகிலேஷ் யாதவ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அகிலேஷ் யாதவும், காங்கிரசும் கைகோர்க்கும் பட்சத்தில் இரண்டு பெரிய எதிரிகளை சமாளிக்க வேண்டிய சவால் மாயாவதிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே உத்தரபிரதேசத்தில் நிர்வாகிகளை மாயாவதி மாற்ற தொடங்கி உள்ளார். உத்தரபிரதேசத்தின் மேற்கு, லக்னோ, வாரணாசி, கோரக்பூர் பகுதிகளில் நிறைய நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதுபோல உத்தரகாண்ட், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநில பகுஜன் சமாஜ் பொறுப்பாளர்களையும் மாயாவதி அதிரடியாக மாற்றி உள்ளார்.
Tags:    

Similar News