செய்திகள்

நிபா வைரஸ் விவகாரத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கும் - மத்திய அரசு உறுதி

Published On 2019-06-04 08:59 GMT   |   Update On 2019-06-04 08:59 GMT
நிபா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை. தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கேரளாவில் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டு 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையால் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இப்போது மீண்டும் அதுபோன்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞரின் ரத்த மாதிரிகள் புனே மற்றும் ஆலப்புழாவுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.



இதற்கிடையே, எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதியாகியது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கியதை தொடர்ந்து மத்திய அரசு இன்று  அவசர ஆலோசனை நடத்தியது. 

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தினார். 

இதுதொடர்பாக ஹர்ஷ்வர்தன் கூறுகையில், “மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்போம் என்று கேரள சுகாதாரத்துறை மந்திரியிடம் நான் உறுதி அளித்தேன். எனவே, அச்சப்பட தேவையில்லை. கேரளாவுக்கு 6 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News