செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல்: டிகே சிவக்குமார் தகவல்

Published On 2019-06-04 02:03 GMT   |   Update On 2019-06-04 02:03 GMT
மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம் என்றும், அணைகளில் நீர் குறைவாக உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் உள்ளது என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

இதுபற்றி கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூரு விதான சவுதாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்), கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து சுமார் 13 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் மட்டுமே இருப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் அணைக்கு வரும் நீர்வரத்து மிக,மிக குறைவாக உள்ளது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு திறந்துவிட உத்தரவிட்டுள்ள 9.19 டி.எம்.சி. தண்ணீரை முழுமையாக திறந்து விடுவதில் சிக்கல் உள்ளது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நீரை முழுமையாக தமிழகத்திற்கு திறந்து விட முடியும். இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஒழுங்காற்று குழுவின் மூலமாக ஆணையத்திற்கு தெரிவிப்பார்கள்.

இருப்பினும் கோர்ட்டு உத்தரவை கடைபிடிக்க வேண்டி உள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்காவிட்டால் விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். இது தவிர கர்நாடகத்தில் பருவமழை நன்கு பெய்ய வேண்டி வருகிற 5-ந் தேதி(அதாவது நாளை) சிறப்பு பூஜை நடத்த இருக்கிறோம். மேகதாது அணை திட்டம் குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக எம்.பி.க்கள் கட்டாயம் விவாதம் நடத்த மாநில அரசு வலியுறுத்தும். கர்நாடக அரசு தற்போது வரை செய்துள்ள பணிகள் குறித்த அனைத்து தகவல்களும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும்.

தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு குறித்து எங்களுக்கு கவலை இல்லை. மேகதாது அணை விவகாரத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சுமார் ரூ.9,500 கோடி மதிப்பிலான திட்ட வரைவு அறிக்கையை கர்நாடக அரசு, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளது. அதேபோல அணை கட்டுவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான சாத்தியக்கூறு அறிக்கையையும் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.

மத்திய மந்திரிசபையில் இருந்த சதானந்த கவுடா, அனந்த் குமார் ஆகியோர் மேகதாது அணை திட்டத்திற்கு மிகுந்த பக்கபலமாக இருந்து வந்தனர். தற்போது மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது கர்நாடக எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும்.

மேகதாது திட்டத்தில் இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்த அனைத்து விவரங்களையும் மாநில அரசு, கர்நாடக எம்.பி.க்களுக்கு வழங்கும். அதை வைத்து நாடாளுமன்றத்தில் அவர்கள் விவாதம் நடத்த வேண்டும். மேகதாது அணை திட்டத்தால் கர்நாடகவிற்கு எந்தப் பயனும் இல்லை. முழுமையான பயனைப் பெறப்போவது தமிழகம் தான். இதை கோர்ட்டில் எடுத்துரைப்போம்.

ஏற்கனவே மேகதாது அணை குறித்து நிதின் கட்காரியை சந்தித்து விளக்கம் அளித்துள்ளோம். அதனால் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரிகள், மேகதாது அணை கட்ட மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News