செய்திகள்

முத்தலாக் மசோதா மீண்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் - மத்திய மந்திரி அறிவிப்பு

Published On 2019-06-03 11:24 GMT   |   Update On 2019-06-03 11:24 GMT
பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வோம் என மத்திய சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இஸ்லாம் மதத்தில் ஒரே நேரத்தில் 'முத்தலாக்’ என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

அங்கு சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கிப் போனது.

இருப்பினும், ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அவசர சட்டமாக முத்தலாக் ஒழிப்பு சட்டம் 19-9-2018 அன்று அமல்படுத்தப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து மீண்டும் இருமுறை நீட்டிப்பும் செய்யப்பட்டது. இறுதியாக 21-2-2019 அன்று இந்த அவசர சட்டம் நீட்டிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின்னர் சட்டத்துறை அமைச்சர் பதவி மீண்டும் ரவி சங்கர் பிரசாதுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவி சங்கர் பிரசாத், பாராளுமன்றத்தில் மீண்டும் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘இது எங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சம் என்பதால் நிச்சயமாக தாக்கல் செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற நடைமுறைகளின்படி, மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்கள் அங்கு நிறைவேற்றப்பட்டு மக்களவையில் முடங்கிப் போனால் பாராளுமன்றத்துக்கான மறுதேர்தல் முடிந்தும் அந்த மசோதா உயிர்ப்புடன் இருக்கும்.

ஆனால், மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு மாநிலங்களவையில் சில மசோதாக்கள் முடங்கிப் போனால் பாராளுமன்றத்துக்கான மறுதேர்தல் முடிந்த பின்னர் அந்த மசோதா மறுபடியும் புதிதாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News