செய்திகள்

சுஷ்மா சுவராஜ் பாணியை பின்பற்றும் ஜெய்சங்கர்

Published On 2019-06-03 10:25 GMT   |   Update On 2019-06-03 10:25 GMT
இத்தாலிக்கு சுற்றுலா செல்லும் போது ‘பாஸ்போட்டை’ இழந்த இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கர் டுவிட்டர் மூலம் உதவிகள் செய்துள்ளார்.
புதுடெல்லி:

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்கவைத்து கொண்டது. அதைத் தொடர்ந்து  கடந்த மே 30 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற்று, புதிய அமைச்சரவை செயல்படத் தொடங்கியது.

அந்த அமைச்சரவையில் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் பொறுப்பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் டுவிட்டர் கணக்கிற்கு மகாலட்சுமி என்ற பெண், ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில், தனது குடும்ப உறுப்பினர்கள் இத்தாலிக்கு சுற்றுலா சென்றதாகவும் அப்போது அவர்களது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாகவும், அதனால் உதவி செய்யும்படி குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து டுவிட்டரில் பதில் அளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ரோம் நகரில் உள்ள இந்திய தூதரகம் தயாராக உள்ளது, என தெரிவித்துள்ளார்.


இதே போன்று குவைத் நாட்டில் வேலை செய்துவந்த தனது கணவரை காணவில்லை என புகார் கூறிய பெண்ணுக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர், குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தூதரகத்தோடு தொடர்பில் இருக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைப் போன்றே தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் டுவிட்டர் மூலம் உதவிகள் செய்வது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Tags:    

Similar News