செய்திகள்

மராட்டிய சட்டசபை தேர்தல்- பா.ஜனதா, சிவசேனா தலா 135 தொகுதியில் போட்டி

Published On 2019-06-03 09:56 GMT   |   Update On 2019-06-03 09:56 GMT
மராட்டிய சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பா.ஜனதாவும், சிவசேனாவும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மும்பை:

மராட்டிய மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

மராட்டிய சட்டசபையின் பதவி காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. இதனால் அக்டோபர் மாதம் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.

2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடந்தது. அது மாதிரியே தற்போதும் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மராட்டிய சட்டசபை தேர்தல் தொடர்பாக பா.ஜனதா- சிவசேனா இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அமோக வெற்றியால் பேச்சு வார்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மராட்டிய சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பா.ஜனதாவும், சிவசேனாவும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதியுள்ள 18 இடங்கள் கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்,

இது தொடர்பாக வருவாய் துறை மந்திரியும், அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவருமான சந்திரகாந்த் பட்டீல் கூறியதாவது:-

மராட்டிய சட்டமன்ற தேர்தலை பா.ஜனதா- சிவசேனா ஒன்றாக இணைந்து எதிர்கொள்ளும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மராட்டிய முதல் - மந்திரி பட்னாவிஸ் ஆகியோர் ஏற்கனவே ஒருமித்த குரலில் தெரிவித்துவிட்டனர். எங்கள் கட்சி அந்த வார்த்தையில் இருந்து ஒரு போதும் பின் வாங்காது.

பா.ஜனதாவும், சிவசேனாவும் சம அளவில் தொகுதிகளை பகிர்ந்து கொண்டு உள்ளன. அதன் படி இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதியுள்ள 18 இடம் எங்கள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்து பா.ஜனதா முதல் முறையாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 இடங்களில் பா.ஜனதா கூட்டணி 41-ல் வெற்றி பெற்று பா.ஜனதா 25 இடங்களில் போட்டியிட்டு 23 தொகுதியிலும், சிவசேனா 23 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதியிலும் வெற்றி பெற்றன.

கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 122 தொகுதிகளிலும், சிவசேனா 63 இடங்களிலும் வெற்றி பெற்றன.
Tags:    

Similar News