செய்திகள்

நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து - திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் இருந்து விலகல்

Published On 2019-06-02 12:05 GMT   |   Update On 2019-06-02 12:05 GMT
நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் இருந்து விலகியுள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிதி மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு அடுத்தபடியாக நிதி மந்திரி பதவியை வகிக்கும் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதனால் அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் நிர்மலா சீதாராமன் நிதி மந்திரியான செய்தியை பகிர்ந்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார். 



அதில், 1970-ம் ஆண்டுக்குபின் நிதித்துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் மந்திரியான உங்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டின பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இல்லை. அதை மேம்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். எங்களால் முடிந்த ஒத்துழைப்பு அளிப்போம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் டுவிட்டரில் இருந்து விலகியுள்ளார். திவ்யா ஸ்பந்தனாவின் டுவிட்டர் கணக்கு செயல்பாட்டில் இல்லை, கணக்கை அணுகினால் நீக்கப்பட்டுவிட்டது என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் இருந்து திவ்யா ஸ்பந்தனா விலகியதற்கான காரணம் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. 
Tags:    

Similar News