செய்திகள்

புதிய கேபினட் மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு

Published On 2019-05-31 04:14 GMT   |   Update On 2019-05-31 04:14 GMT
பிரதமர் நரேந்திர மோடியுடன் பதவி ஏற்றுக்கொண்ட மத்திய கேபினட் மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு பற்றி விரிவாக பார்க்கலாம்
பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று பதவி ஏற்றுக்கொண்ட மத்திய கேபினட் மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்(67), உத்தரபிரதேச மாநிலம் பாபவ்ராவில் பிறந்தவர். 13 வயது முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இயற்பியல் விரிவுரையாளராக வாழ்க்கையை தொடங்கியவர். பா.ஜனதா சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். 1984-ல் மாநில பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் ஆனார். 1997-ல் மாநில பா.ஜனதா தலைவர் ஆனார். மாநில மந்திரியாக பணியாற்றி உள்ளார். 1999-ல் மத்திய மந்திரியாக பணியாற்றிய இவர், 2000-ல் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 2003-ல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் விவசாய மந்திரியாக இருந்தார். இரு முறை பா.ஜனதா தேசிய தலைவர் பதவி வகித்தார். 2014 தேர்தலில் லக்னோ தொகுதியில் வென்று மோடி அரசில் உள்துறை மந்திரி பதவி வகித்தார். இம்முறையும் அதே தொகுதியில்தான் வெற்றி பெற்றுள்ளார். சாவித்திரி என்ற மனைவியும், பங்கஜ், நீரஜ், அனாமிகா என 3 குழந்தைகளும் உள்ளனர்.

அமித் ‌ஷா

அமித் ‌ஷா (வயது 54), மராட்டிய மாநிலம் மும்பையில், குஜராத் வணிக குடும்பத்தில் பிறந்தவர். பி.எஸ்.சி. உயிர் வேதியியல் பட்டதாரி. குழந்தைப்பருவம் முதல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். 1986-ல் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். மறுஆண்டு முதல் கட்சியின் இளைஞர் அணியில் தீவிர பங்கேற்றார். 1991 பாராளுமன்ற தேர்தலில் அத்வானிக்காக காந்திநகரில் பிரசாரம் செய்தார். 1995-ல் குஜராத்தில் கேசுபாய் பட்டேல் தலைமையில் பா.ஜனதா அரசு பதவி ஏற்றபோது, மோடியுடன் இணைந்து கிராமப்புறங்களில் கட்சியை கொண்டு செல்ல உழைத்தார். 2001-ல் மோடி, குஜராத் முதல்-மந்திரியானபோது அவரது வலது கரம் ஆனார். 2002 தேர்தலுக்கு பின்னர் மோடி மீண்டும் முதல்-மந்திரியானபோது உள்துறை, சட்டம் என 12 துறைகளுக்கு மந்திரியாக பணியாற்றினார். மோடி பிரதமரானபோது, அமித் ‌ஷாவும் தேசிய அரசியலுக்கு போனார். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 2014 ஜூலையில் பா.ஜனதா கட்சிக்கு தலைவர் ஆனார். தொடர்ந்து மோடிக்கு பக்க பலமாக திகழ்ந்தார். மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து கொண்டே 2019 தேர்தலில் அத்வானியின் தொகுதியான குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இவருக்கு சோனல் என்ற மனைவியும் ஜெய்‌ஷா என்ற மகனும் உள்ளனர்.

நிதின் கட்காரி

நிதின் கட்காரி (62), மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிறந்தவர். எம்.காம். எல்.எல்.பி., பட்டங்கள் பெற்றவர். மராட்டிய மாநில பொதுப்பணித்துறை மந்திரி பதவி வகித்தவர். மராட்டிய மாநில பா.ஜனதா கட்சிக்கு தலைவராக இருந்தவர். பின்னர் தேசிய தலைவராகவும் உயர்ந்தார். கடந்த தேர்தலில் நாக்பூர் தொகுதியில் வெற்றி பெற்று, மோடி அரசில் சாலை, போக்குவரத்து, கப்பல் துறை மந்திரியாக இருந்தார். இம்முறையும் நாக்பூரில் போட்டியிட்டு வென்று மந்திரியாகி உள்ளார். மனைவி காஞ்சன், 3 குழந்தைகள் உள்ளனர்.

சதானந்த கவுடா

சதானந்த கவுடா (66). கர்நாடக மாநிலம் சுல்லியாவில் பிறந்தவர். சட்டம் படித்தவர். ஜனசங்கத்தில் இணைந்து பணியாற்றியவர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றியவர். 2011-ல் முதல்-மந்திரி ஆனார். 2014-ல் பெங்களூரு வடக்கு தொகுதியில் வெற்றி பெற்று ரெயில்வே, சட்டம், புள்ளிவிவரம் துறைகளில் மந்திரியாக இருந்தார். இந்த தேர்தலிலும் பெங்களூரு வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். மனைவி தத்தி, 2 குழந்தைகள் உள்ளனர்.

ராம்விலாஸ் பஸ்வான்

ராம்விலாஸ் பஸ்வான் (72). பீகாரில் ககாரியாவில் பிறந்தவர். சட்டம் படித்தவர். சம்யுக்தா சோசலிச கட்சி, லோக்தளம், ஜனதா, ஜனதாதளம் என பல கட்சிகளில் இருந்தவர். கடைசியில் லோக்ஜனசக்தி கட்சியை நிறுவி நடத்தி வருகிறார். முந்தைய மோடி அரசில் உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி பதவி வகித்தார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இவரது மகன் சிராக் பஸ்வான் மந்திரி ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராம்விலாஸ் பஸ்வானுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மனைவி ரீனா சர்மா, 4 குழந்தைகள் உள்ளனர்.

நரேந்திரசிங் தோமர்


நரேந்திர சிங் தோமர் (61). மத்திய பிரதேச மாநிலம், மொரினாவில் பிறந்தவர். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவர். முந்தைய மோடி அரசில் ஊரக வளர்ச்சித்துறை, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பதவி வகித்தவர். நடந்து முடிந்த தேர்தலில் மொரினா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மனைவி கிரண், 3 குழந்தைகள் உள்ளனர்.

ரவி சங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத் (64). பீகார் மாநிலம், பாட்னாவில் பிறந்தவர். இவரது தந்தை தாகூர்சிங், ஜனசங்க நிறுவனர்களில் ஒருவர். ரவிசங்கர் பிரசாத், எம்.ஏ., எல்.எல்.பி. பட்டம் பெற்றவர். அத்வானிக்காக வழக்குகளில் வாதாடிய சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீலாக திகழ்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். முந்தைய மோடி அரசில் சட்டம், நீதித்துறை மந்திரி பதவி வகித்தார். இந்த பாராளுமன்ற தேர்தலில் பாட்னாசாகிப் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளராக நின்ற நடிகர் சத்ருகன் சின்காவை வீழ்த்தியவர். மனைவி மாயா.

ஹர்சிம்ரத் கவுர் பாதல்

ஹர்சிம்ரத் கவுர் பாதல் (52). சண்டிகாரில் பிறந்தவர். சிரோமணி அகாலிதள தலைவர் பிரகா‌‌ஷ் சிங் பாதல் மருமகள். இவரது கணவர் சுக்பீர்சிங் பாதல். 2009, 2014, 2019 என 3 முறை பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார். முந்தைய மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி பதவி வகித்தார். கணவர் சுக்பீர்சிங் பாதல், 3 குழந்தைகள் உள்ளனர்.

தாவர் சந்த் கெலாட்

தாவர் சந்த் கெலாட் (71), மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் பிறந்தவர். பா.ஜனதா கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வகித்தவர். மாநிலங்களவை உறுப்பினர். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த தலைவர். முந்தைய மோடி அரசில் சமூக நீதித்துறை மந்திரி பதவி வகித்தார். மனைவி அனிதா. 4 குழந்தைகள் உள்ளனர்.

ரமே‌‌ஷ் பொக்ரியால்

ரமே‌‌ஷ் பொக்ரியால் (59), உத்தரகாண்ட் மாநிலம் பினானியில் பிறந்தவர். பி.எச்.டி மற்றும் டி.லிட் டாக்டர் பட்டங்கள் பெற்றவர். அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் ரமே‌‌ஷ் பொக்ரியால். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மாநில முதல்-மந்திரி பதவி வகித்தவர். 2014, 2019 தேர்தல்களில் ஹரித்துவாரில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வு பெற்றவர். மனைவி குசும் காந்தா, 3 மகள்கள் உள்ளனர். மத்திய மந்திரி பதவிக்கு புதியவர்.

அர்ஜூன் முண்டா

அர்ஜூன் முண்டா (51), ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து பின்னர் பா.ஜனதாவில் சேர்ந்து தேசிய பொதுச்செயலாளராக விளங்கியவர். 2010-13 காலகட்டத்தில் ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி பதவி வகித்துள்ளார். ஜாம்ஷெட்பூர் எம்.பி.யான இவர் முதல் முறையாக மத்திய மந்திரி ஆகி உள்ளார். மீரா என்ற மனைவி உள்ளார்.

ஸ்மிரிதி இரானி



ஸ்மிரிதி இரானி (43), டெல்லியில் பிறந்தவர். டி.வி. தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். மராட்டிய மாநில பா.ஜனதா இளைஞர் அணி துணைத்தலைவர் பதவி வகித்தவர். பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவர் பதவியும் வகித்திருக்கிறார். 2004 பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினிசவுக்கில் காங்கிரஸ் தலைவர் கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி கண்டார். 2014 தேர்தலில் அமேதியில் ராகுல்காந்தியை எதிர்த்து களம் கண்டு தோற்றார். இந்த தேர்தலில் அவர் அதே தொகுதியில் ராகுலை வீழ்த்தி அபார வெற்றி பெற்று சாதனை படைத்தார். முந்தைய மோடி அரசில் ஜவுளித்துறை மந்திரி பதவி வகித்தார். கணவர் ஜூபின் இரானியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

ஹர்சவர்தன்


ஹர்சவர்தன் (64), டெல்லியில் பிறந்தவர். எம்.எஸ். பட்டம் பெற்ற மருத்துவ நிபுணர். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.சில் ஈடுபாடு கொண்டவர். டெல்லி மாநில மந்திரி பதவி வகித்தவர். டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். முந்தைய மோடி அரசில் சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரி பதவி வகித்தவர். மனைவி நுட்டன், 3 குழந்தைகள் உள்ளனர்.

பிரகா‌‌ஷ் ஜவடேகர்

பிரகா‌‌ஷ் ஜவடேகர் (68), மராட்டிய மாநிலம், புனே நகரில் பிறந்தவர். பா.ஜனதாகட்சி இளைஞர் அணியில் சேர்ந்து பணியாற்றியவர். மாணவர் இயக்கங்களில் பணியாற்றியவர். மராட்டியத்தில் எம்.எல்.சி. பதவி வகித்தவர். முதலில் மராட்டியம், பின்னர் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். முந்தைய மோடி அரசில் முக்கிய துறையான மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பதவி வகித்தவர். மனைவி பிரசீ, 2 குழந்தைகள் உள்ளனர். 2 மகன்கள். ஒருவர் பல் மருத்துவர். மற்றொருவர் அமெரிக்காவில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.

பியூஸ் கோயல்

பியூஸ் கோயல் (54), மராட்டிய மாநிலம், மும்பையில் பிறந்தவர். பா.ஜனதா தேசிய பொருளாளராக விளங்கியவர். மராட்டிய மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். முந்தைய மோடி அரசில் நிலக்கரி, சுரங்கம், ரெயில்வே, நிதி என பல துறைகளில் மந்திரி பதவி வகித்துள்ளார். இவரது தந்தை வேதபிரகா‌‌ஷ் கோயல், மத்தியில் வாஜ்பாய் அரசில் மந்திரியாக இருந்தவர். பியூஸ் கோயலுக்கு மனைவி சீமாவும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் (49). ஒடிசா மாநிலம் டல்சேரில் பிறந்தவர். எம்.ஏ.பட்டதாரி. ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து பணியாற்றியவர். தந்தை தேவேந்திர பிரதான், மத்தியில் வாஜ்பாய் அரசில் மந்திரி பதவி வகித்தவர். முந்தைய மோடி மந்திரிசபையில் பெட்ரோலிய துறை மந்திரி பதவி வகித்தார். கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மனைவி மிருதுளா, 2 குழந்தைகள் உள்ளனர்.

முக்தர் அப்பாஸ் நக்வி

முக்தர் அப்பாஸ் நக்வி (61). உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் (அலகாபாத்) பிறந்தவர். 17 வயதிலேயே நெருக்கடி நிலையின்போது சிறைவாசம் அனுபவித்தவர். வாஜ்பாய் அரசில் தகவல், ஒலிபரப்பு ராஜாங்க மந்திரி பதவி வகித்தவர். 2016-ல் உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றார். முந்தைய மோடி அரசில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரியாக இருந்தார். சீமா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

பிரகலாத் ஜோ‌ஷி

பிரகலாத் ஜோ‌ஷி (56), கர்நாடக மாநிலம், பீஜப்பூரில் பிறந்தவர். கர்நாடக மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர். 4-வது முறையாக எம்.பி. ஆகி உள்ளார். முதல் முறையாக மத்திய மந்திரி ஆகி உள்ளார். மனைவி ஜோதி, 3 மகள்கள் உள்ளனர்.

மகேந்திர நாத் பாண்டே

மகேந்திரநாத் பாண்டே (61), உத்தரபிரதேச மாநிலம், பக்காபூரில் பிறந்தவர். எம்.ஏ. இதழியல் பட்டதாரி. முனைவர் பட்டமும் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ்.சில் ஈடுபாடு கொண்டவர். நெருக்கடிநிலை காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர். உத்தரபிரதேசத்தில் கல்யாண்சிங் மந்திரிசபையில் மந்திரி பதவி வகித்தவர். முந்தைய மோடி அரசில் மனிதவளத்துறை ராஜாங்க மந்திரி பதவி வகித்தார். பின்னர் மாற்றப்பட்டார். உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவராக பணியாற்றி வந்தார். மனைவி பிரதிமா, ஒரு மகள் உள்ளனர்.

அரவிந்த் சாவந்த்

அரவிந்த் சாவந்த் (67), மும்பையில் பிறந்தவர். சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவர். 2014, 2019 தேர்தல்களில் மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவை வீழ்த்தியவர். மனைவி அனுயா சாவந்த். முதல் முறையாக மத்திய மந்திரி ஆகி உள்ளார்.

கிரிராஜ் சிங்

கிரிராஜ் சிங் (66), பீகார், பர்ஹியாவில் பிறந்தவர். பீகாரில் பல்வேறு துறைகளில் மந்திரி பதவி வகித்தவர். கடந்த தேர்தலில் நவாடா பாராளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். முந்தைய மோடி அரசில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை மந்திரி பதவி வகித்தார். இந்த தேர்தலில் பெகுசாராய் தொகுதியில் மாணவர் தலைவர் கன்னையா குமாரை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். உமா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

கஜேந்திர சிங் செகாவத்

கஜேந்திரசிங் செகாவத் (51), ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் பிறந்தவர். எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்றவர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக விளங்கியவர். கடந்த 2014 தேர்தலில் ஜோத்பூரில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர். இப்போதும் அதே தொகுதியில் வென்றுள்ளார். முந்தைய மோடி அரசில் விவசாயத்துறை ராஜாங்க மந்திரி பதவி வகித்தவர். மனைவி நானன்த் கன்வார், 3 குழந்தைகள் உள்ளனர். இந்த 22 பேருடன் தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகிய 2 பேரும் கேபினட் மந்திரிகள் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News