செய்திகள்

ராகுல் காந்தி தலைவர் பதவியில் நீடிக்க தொண்டர்கள் விருப்பம் - கே.எஸ்.அழகிரி

Published On 2019-05-28 21:43 GMT   |   Update On 2019-05-28 21:43 GMT
ராகுல் காந்தி தலைவர் பதவியில் நீடிக்க தொண்டர்கள் விரும்புகின்றனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
புதுடெல்லி:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தலைவர் ராகுல் காந்தியை சந்திப்பதற்காக டெல்லிக்கு வந்தோம். நேரம் கேட்டு இருக்கிறோம். கிடைத்தவுடன் சந்தித்து பேசுவோம்.

இந்திரா காந்தியை போல, ராஜீவ் காந்தியை போல நரேந்திர மோடியும் ஒரு தனித்துவமான தலைவர் என்று நடிகர் ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார். அது அவரது ஒப்பீடு. அதை ஏற்பதற்கோ, மறுப்பதற்கோ எனக்கு உடன்பாடு இல்லை.

12 கோடி மக்கள் ராகுல் காந்திக்காக வாக்கு அளித்து இருக்கிறார்கள். தொண்டர்களால் விரும்பப்படும் தலைவர் அவர். திணிக்கப்படும் தலைவர் அல்ல. எனவே, அவர் தான் தலைமை பொறுப்பில் தொடர வேண்டுமே தவிர, மற்றவர்களை அதில் வைப்பது வீண் வேலை ஆகிவிடும்.



தமிழக காங்கிரசின் செயற்குழு இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கூடுகிறது. இதில் ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியை தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப இருக்கிறோம்.

பதவியை துறப்பதில் ராகுல் காந்தி வேண்டுமானால் உறுதியாக இருக்கலாம். ஆனால் அவர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்பதில் தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அவர் தலைவர் பதவியில் நீடிக்க தொண்டர்கள் விரும்புகின்றனர்.

காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது இது முதல்முறை அல்ல. இருந்தாலும் ‘பீனிக்ஸ்’ பறவை போல மீண்டும் எழுந்து வரும். ஆட்சிக்கட்டிலில் அமரும். இதுதான் கடந்த கால வரலாறு.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News