செய்திகள்

தாயின் மடியில் சாக ஆசை - புற்றுநோய் தாக்கிய விசாரணை கைதி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு

Published On 2019-05-28 14:06 GMT   |   Update On 2019-05-28 14:06 GMT
புற்றுநோய் முற்றிய நிலையில் ராஜஸ்தான் சிறையில் கம்பிகளுடன் இறுதி நாட்களை எண்ணிவரும் விசாரணை கைதி தாயின் மடியில் சாவதற்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவர் கள்ளநோட்டு வைத்திருந்ததாக கடந்த ஆண்டில் போலீசார் கைது செய்தனர்.

ஜெய்ப்பூர் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள அவருக்கு வாயில் ஏற்பட்ட புற்றுநோய் மிகவும் முற்றி மூன்றாவது நிலையை எட்டியுள்ள நிலையில் கடந்த 8 மாதங்களாக தினந்தோறும் ‘ரேடியோதரபி’ எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என் மீதான வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட பல மாதங்கள் ஆகலாம். அதற்குள் புற்றுநோயின் தாக்கத்தாலும் மன உளைச்சலிலும் பைத்தியமாகி நான் இறந்துவிட நேரிடலாம். எனவே, உடல்நிலை கருதி இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றத்தால் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.

கடைசியாக ராஜஸ்தான் ஐகோர்ட்டும் தனது ஜாமீன் மனுவை கடந்த மாதம் தள்ளுபடி செய்து விட்டதால் விரக்தியின் விளிம்பு நிலைக்கு சென்றுவிட்ட அந்த கைதி, ‘எனது நாட்கள் எண்ணப்படுகின்றன. வாழ்நாளில் எஞ்சியிருக்கும் சில நாட்களையாவது குடும்பத்தார், உறவினர்களுடன் கழித்து விட்டு, என் தாயாரின் மடியில் தலைவைத்து சாக விரும்புகிறேன்.

எனவே, எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்' என அந்த கைதி தற்போது சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அனிருதா போஸ் ஆகியோரை கொண்ட அமர்வு மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஜூன் 5-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ராஜஸ்தான் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tags:    

Similar News