செய்திகள்

ஜாகீர் மூசா சுட்டுக் கொலை எதிரொலி- ஜம்மு காஷ்மீரில் நான்காவது நாளாக பள்ளி, கல்லூரிகள் மூடல்

Published On 2019-05-27 09:45 GMT   |   Update On 2019-05-27 09:45 GMT
ஜம்மு காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதி ஜாகீர் மூசாவை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதையடுத்து, பதற்றம் நீடிப்பதால், நான்காவது நாளாக இன்று பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு கடந்த 23ம் தேதி போலீசார் மற்றும் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஜாகீர் மூசா உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அன்சர் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பின் தலைவரான ஜாகீர் மூசா கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.

நான்காவது நாளாக இன்றும் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பி.எட். தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புல்வாமாவில் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அனந்த்நாக் மாவட்டத்தில் அனந்த்நாக் மற்றும் பிஜ்பெகரா நகரில் டிகிரி கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 
Tags:    

Similar News