செய்திகள்

முன்ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத்துறை வலியுறுத்தல் - ராபர்ட் வதேராவுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

Published On 2019-05-27 07:57 GMT   |   Update On 2019-05-27 07:57 GMT
சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை ரத்து செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வலியுறுத்தியது.
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக பொருளாதார அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இவ்வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியபோது அனுமதி பெறாமல் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்திருந்தது.

இதற்கிடையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி ரோவ்ஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா சமீபத்தில் மனு செய்திருந்தார்.


லண்டன் பங்களா

இந்நிலையில், ராபர்ட் வதேராவுக்கும் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது நண்பர் மனோஜ் அரோராவுக்கும் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ராபர்ட் வதேரா சரியாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அதனால், அவரை விசாரணை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.

எனவே, இந்த வழக்கின் தன்மை அறியாமல்  ராபர்ட் வதேராவுக்கும் அவரது நண்பர் மனோஜ் அரோராவுக்கும் விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறையின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் கோரிக்கை தொடர்பாக பதிலளிக்குமாறு ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதி சந்திர சேகர் இவ்வழக்கின் மறுவிசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News