செய்திகள்

76 நாட்கள் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தது

Published On 2019-05-27 03:34 GMT   |   Update On 2019-05-27 06:17 GMT
76 நாட்கள் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் இன்று அரசு பணிக்கு திரும்புகிறார்கள்.
புதுடெல்லி:

17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி முதல் மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான தேர்தல் தேதி மார்ச் மாதம் 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன.

அதன்படி, “புதிதாக எந்த நலத்திட்டங்களையும் அரசு அறிவிக்கக் கூடாது. அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது. அரசு விழாக்கள் நடைபெறக் கூடாது” என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசு அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், 76 நாட்கள் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, உடனடியாக தேர்தல் நடை முறைகளும் வாபஸ் பெறப்பட்டன. தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) அரசு பணிக்கு திரும்ப இருக்கிறார்கள்.

இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியா முழுவதும் நடந்த பாராளுமன்ற தேர்தல், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் சில இடங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான முடிவுகள் வரப்பெற்றுவிட்டன. அதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நிறுத்தப்படுகின்றன. உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



இனி, அரசு  அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள் தலைமைச் செயலகம் வந்து பணியில் ஈடுபடுவார்கள். துறை வாரியாக கூட்டங்கள் நடத்தலாம். புதிய அறிவிப்புகளை வெளியிடலாம்.  
Tags:    

Similar News