செய்திகள்

ஊடகங்களிடம் உளறி வைக்காதீர்கள் - பாஜக எம்.பி.க்களுக்கு மோடி கட்டளை

Published On 2019-05-26 11:21 GMT   |   Update On 2019-05-26 11:21 GMT
ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது நாவடக்கம் தேவை. ஒரேயொரு தவறான கருத்து எல்லா காரியங்களையும் பாழடித்து விடும் என பாஜக புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக குழு தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

தனது பேச்சினிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ’நமது சேவை மனப்பான்மைக்காக நம்மை நம்பி வாக்களித்தவர்களின் நன்மதிப்பை பெறும் வகையிலும்  நமக்கு வாக்களிக்காதவர்களின் நம்பிக்கையை பெறும் நோக்கத்திலும் உங்கள் உழைப்பு அமைய வேண்டும்.

குறிப்பாக, வி.ஐ.பி. கலாசாரத்தை நீங்கள் துறக்க வேண்டும். விமான நிலையம் போன்ற இடங்களில் மக்களோடு மக்களாக வரிசையாக அனைத்து காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.



சிலருக்கு காலையில் எழுந்தவுடன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தே தீரவேண்டும் என்ற மனப்பாங்கு உள்ளது. பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும், தொலைக்காட்சிகளில் முகம் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விலகி இருங்கள்.

இதை நீங்கள் தவிர்த்தால் ஏராளமான பிரச்சனைகளையும் நீங்கள் தவிர்த்து விடலாம். நீங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தும் பலனில்லை என்னும் அளவுக்கு தவறான ஒரேயொரு கருத்து அவை அத்தனையையும் பாழாக்கி விடும்’ என வலியுறுத்தினார்.
Tags:    

Similar News