செய்திகள்

2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது

Published On 2019-05-25 01:25 GMT   |   Update On 2019-05-25 01:25 GMT
பாராளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி இப்படி தொடர்ந்து ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை என்கிற வகையில் இது சாதனை வெற்றியாக அமைந்துள்ளது.

மற்றொரு புறம், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 2-வது முறையாக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது.

அத்துடன், இந்திய அரசியலில் குறிப்பாக கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், அதெல்லாம் பழங்கதை என்ற நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளன.

2004 பாராளுமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 59 எம்.பி.க்கள் இவ்விரு கட்சிகள் சார்பில் தேர்வு பெற்றிருந்தனர். கடந்த 2014 தேர்தலில் இவ்விரு கட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றன. இதுதான் இதுவரையில் அக்கட்சிகள் பெற்ற குறைவான எண்ணிக்கையாக இருந்து வந்தது.

இந்த தேர்தலில்தான் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் 5 தொகுதிகளில் மட்டுமே இக்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

கேரளாவில் ஆலப்புழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஏ.எம். ஆரிப் வெற்றி பெற்றார்.

மீதி 4 இடங்களையும் தமிழ்நாட்டில் இருந்து இக்கட்சிகளுக்கு பெற்றுத்தந்த புண்ணியம், தி.மு.க.வைச் சேரும். தி.மு.க. கூட்டணியில் இணை ந்து தலா 2 தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டு, வெற்றி பெற்றிருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பி.ஆர். நடராஜன் கோவையிலும், சு.வெங்கடேசன் மதுரையிலும் வெற்றி பெற்றனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செல்வராசு நாகப்பட்டினத்திலும், கே.சுப்பராயன் திருப்பூரிலும் வென்றனர்.

நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்ட இடங்கள் 45. இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்ட இடங்கள் 55. ஆக இவ்விரு கட்சிகளும் கூட்டாக போட்டியிட்ட இடங்கள் 100. வெற்றி பெற்ற இடங்கள் 5. எனவே 5 சதவீத வெற்றியை மட்டுமே இந்த கட்சிகள் பெற்றுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்த தேர்தலில் வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது. 2004-ல் 43 தொகுதிகளிலும், 2009-ல் 16 தொகுதிகளிலும், 2014-ல் 9 தொகுதிகளிலும் இந்த கட்சி வெற்றி பெற்றிருந்தது.

இந்த முறையோ 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து, கொடி கட்டிப்பறந்த மேற்கு வங்காளத்திலும், திரிபுராவிலும் ஒரு இடம் கூட இக்கட்சிக்கு கிடைக்கவில்லை.

இதே நிலைதான் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த கட்சி சார்பில் பீகாரில் பெகுசாராய் தொகுதியில் களம் இறங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மாணவர் தலைவர் கன்னையா குமாரும் தோல்வியைத்தான் தழுவினார்.

மேற்கு வங்காளத்தில் இவ்விரு கட்சிகள் சார்பில் களம் கண்டவர்களில் ஒருவர் தவிர்த்து அத்தனை பேரும் டெபாசிட் தொகையினை பறிகொடுத்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கூடவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 2 கட்சிகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு 3 அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது.

1. பாராளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

2. நான்கு மாநிலங்களில் இருந்து 4 இடங்களை கைப்பற்றுவதுடன், 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.

3. நான்கு மாநிலங்களில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். 8 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருக்க வேண்டும்.

இந்த அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்யாத நிலையில், 2 கம்யூனிஸ்டுகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News