செய்திகள்

மோடி புதிய மந்திரிசபை - அமித் ஷா நிதி மந்திரி ஆகிறார்

Published On 2019-05-24 09:34 GMT   |   Update On 2019-05-24 09:34 GMT
பிரதமர் மோடியின் புதிய மந்திரிசபையில் அமித் ஷா நிதி மந்திரியாக்கப்படுவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 17-வது பாராளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் பரபரப்பாக வெளியிடப்பட்டன.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றி மோடியின் அலை என்பதை கடந்து “மோடி சுனாமி” என்று வர்ணிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் தேர்தல் நடை பெற்ற 542 தொகுதிகளில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 357 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்ட முறையில் 303 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.

மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்களே போதும் என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று எட்ட முடியாத இடத்துக்கு சென்றுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்த தடவையும் மிக பரிதாபமான தோல்வியை சந்தித்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மத்தியில் புதிய ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா சார்பில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள் அனைவரும் இன்று தங்கள் தொகுதி அதிகாரிகளிடம் அதற்கான கடிதங்களை பெறுகிறார்கள். அதன் பிறகு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரையும் நாளை (சனிக்கிழமை)க்குள் டெல்லிக்கு வருமாறு மேலிட தலைவர்கள் அழைத்துள்ளனர். பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் டெல்லி வந்ததும் முதலில் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமராக ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார்.

 


இதைத் தொடர்ந்து மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலான எம்.பி.க்களின் கையெழுத்து கடிதத்தை வழங்குவார். அதை ஏற்று ஜனாதிபதி புதிய அமைச்சரவை அமைக்க மோடிக்கு அழைப்பு விடுப்பார்.

அதன்படி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும். மோடி தலைமையிலான அமைச்சரவையில் இந்த தடவை மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்சியில் மத்திய மந்திரிகளாக இருந்த பா.ஜனதா மூத்த தலைவர்கள் சுஷ்மாசுவராஜ், அருண் ஜெட்லி மீண்டும் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. ஆனால் அவர்கள் விரும்பினால் மத்திய மந்திரி பதவியில் தொடரலாம் என்று மோடி கேட்டு கொண்டுள்ளார்.

அத்தகைய நிலை ஏற்பட்டால் சுஷ்மாசுவராஜ் வெளியுறவு துறை மந்திரியாக நீடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அருண்ஜெட்லிக்கு இலாகா மாறலாம்.

அருண்ஜெட்லி கடந்த முறை நிதி மந்திரியாக இருந்து வந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எனவே பியூஸ்கோயல் நிதி மந்திரியாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் இந்த தடவை மத்திய மந்திரி சபையில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. மத்திய மந்திரிசபையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு அவர் பாராளுமன்றத்துக்குள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சரகம் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதமருக்கு அடுத்தப்படியாக இந்த இலாகா 2-வது இடத்தை பெற்றுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த அந்த இலாகாவை கடந்த முறை பா.ஜனதா மூத்த தலைவர் ராஜ்நாத்சிங் வகித்து வந்தார். இந்த தடவை உள்துறை இலாகாவை அமித்ஷா பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் உள்துறை இலாகாவை ராஜ்நாத்சிங் விட்டு கொடுக்க விரும்பமாட்டார் என்று கூறப்படுகிறது. 2-வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள அவர் விரும்புவார். அத்தகைய சூழ்நிலையில் அமித்ஷா நிதி மந்திரியாக்கப்படுவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருண்ஜெட்லிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரது இலாகாவான நிதி அமைச்சகத்துக்குதான் அமித்ஷா வருவார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜனதா புதிய தலைவராக வேறு யாராவது தேர்வு செய்யப்படுவார்களா என்ற கேள்வி குறி எழுந்துள்ளது.

ஆனால் பா.ஜனதா தேசிய தலைவர் பதவியையும் தக்க வைத்துக் கொள்ள அமித்ஷா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜனதாவில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே அமித்ஷா வி‌ஷயத்தில் அடுத்தக்கட்டமாக எத்தகை முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமித்ஷா உள்துறை மந்திரியாகும் பட்சத்தில் ராஜ்நாத்சிங்கை பாதுகாப்பு துறைக்கு மாற்றலாம் என்று தெரிகிறது. தற்போது பாதுகாப்பு துறை மந்திரியாக இருக்கும் நிர்மலா சீதாராமன் சுஷ்மாசுவராஜ் வகித்த வெளியுறவுத்துறைக்கு இடம் பெயரக்கூடும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தோற்கடித்த ஸ்மிரிதிஇராணி மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரியாக இருந்து வருகிறார். அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சத்ருகன்சின்காவை வீழ்த்திய ரவிசங்கர் பிரசாத் இந்த தடவை பாராளுமன்ற விவகார மந்திரியாவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நிதின்கட்காரிக்கு இந்த தடவையும் கூடுதல் இலாகாக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிறுபான்மை நலத்துறை மந்திரியாக இருக்கும் முக்தார் அப்பாஸ் நக்விக்கு இந்த தடவை காபினெட் அந்தஸ்து கிடைக்க வாய்ப்புள்ளது. இது தவிர நிறைய இளைஞர்களும், பெண்களும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளது.

பாரதிய ஜனதா கட்சிக்கு 16 மாநிலங்களில் அமோக வெற்றி கிடைத்துள்ளது. சில பெரிய மாநிலங்களில் பாரதிய ஜனதா 100 சதவீத வெற்றியை ருசித்துள்ளது. அந்த மாநிலங்களுக்கு மத்திய மந்திரிசபையில் அதிக பிரதிநிதித்துவம் கொடுப்பதற்கு மூத்த தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

எனவே மத்திய மந்திரி சபையில் இந்த தடவை அதிகளவில் புதுமுகங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கும் முக் கிய இலாகாக்களை வழங்க மோடி முடிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News