செய்திகள்

வாரணாசியில் மோடி, காந்திநகரில் அமித் ஷா அதிக வாக்குகளில் முன்னிலை

Published On 2019-05-23 09:47 GMT   |   Update On 2019-05-23 09:47 GMT
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜக தலைவர் அமித் ஷா காந்திநகர் தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் சுமார் 350 தொகுதிகளில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட முக்கிய பிரமுகர்கள் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

அவ்வகையில், பிற்பகல் 3 மணிவரை நிலவரப்படி உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி 4 லட்சத்து 41 ஆயிரத்து 59     வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 87 ஆயிரத்து 338 வாக்குகளை பெற்றார். அங்கு சுமார் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றிமுகம் காட்டி வருகிறார்.



இதேபோல், குஜராத் மாநிலத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித் ஷா 8 லட்சத்து 21 ஆயிரத்து 705 வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சி.ஜே.சாவ்டா 3 லட்சத்து 20 ஆயிரத்து 136 வாக்குகளை பெற்று பின்தங்கியுள்ளார். 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா வெற்றிமுகம் காட்டி வருகிறார்.
Tags:    

Similar News