செய்திகள்

டெல்லியில் 7 தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றுகிறது- ஷீலாதீட்சித் பின்னடைவு

Published On 2019-05-23 07:08 GMT   |   Update On 2019-05-23 07:08 GMT
டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. பா.ஜனதா கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜனதா பிடிக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்கள் அதிக ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருகிறார்கள்.

சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் காம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே கவுதம் காம்பீர் முன்னிலை பெற்றார். இன்று மதியம் நிலவரப்படி கவுதம் காம்பீர் காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்தர் சிங்கைவிட 18 ஆயிரத்து 632 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.

சாந்தினி சவுக் தொகுதியில் மத்திய மந்திரி ஹர்‌ஷவர்தன் 8 ஆயிரத்து 764 வாக்குகள், புதுடெல்லியில் தற்போது எம்.பி.யான மீனாட்சிலேகி காங்கிரஸ் வேட்பாளர் அஜர் மக்கானைவிட 10 ஆயிரத்து 486 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.

வடகிழக்கு டெல்லி தொகுதியில் மனோஜ் திவாரி 29 ஆயிரத்து 797 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

தெற்கு டெல்லி தொகுதியில் ரமேஷ் பிதூரி, ஆம் ஆத்மி வேட்பாளர் ராகவ் சதாவை விட 30 ஆயிரத்து 755 ஓட்டு பெற்று இருந்தார்.

மேற்கு டெல்லியில் பர்வேஷ் வர்மா 87 ஆயிரத்து 297 ஓட்டும், வடமேற்கு டெல்லி தொகுதியில் ஹனஸ்ராஜ்ஹான்ஸ் 86 ஆயிரத்து 518 வாக்கும் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.



முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் வேட்பாளருமான ஷீலாதீட்சித் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஷீலா தீட்சித்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட மனோஜ் திவாரி 89 ஆயிரத்து 218 ஓட்டுகள் முன்னிலையில் வெற்றி முகத்தில் உள்ளார்.
Tags:    

Similar News