செய்திகள்

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி முகம்

Published On 2019-05-23 06:53 GMT   |   Update On 2019-05-23 06:53 GMT
பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். தொடர்ந்து அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தபடி உள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் மாநிலம் வதோரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார்.

2 தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர் வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார்.

இந்த தேர்தலில் மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரியங்கா போட்டியிடவில்லை.

காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டார். பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி சார்பில் ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டார். ஆனால் மோடிக்கு இவர்கள் யாரும் வலுவான சவாலை ஏற்படுத்தவில்லை.

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் கடந்த தேர்தலின்போது சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இந்த தடவை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க பா.ஜனதா நிர்வாகிகள் களம் இறக்கப்பட்டனர்.

அதற்கேற்ப வாரணாசி தொகுதி முழுக்க பா.ஜனதா தீவிர பிரசாரம் நடத்தியது. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

மதியம் 12 மணி அளவில் சில சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு இருந்தன. அப்போதே பிரதமர் மோடி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். தொடர்ந்து அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தபடி உள்ளது.

எனவே அவர் இந்த தடவையும் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News