செய்திகள்

டெல்லிக்கு வருமாறு 20 ஆயிரம் பா.ஜனதா தொண்டர்களுக்கு அழைப்பு

Published On 2019-05-23 05:37 GMT   |   Update On 2019-05-23 05:37 GMT
டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்ததால் வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் செய்து வந்தனர்.

டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திலும், மாநிலங்களில் உள்ள பா.ஜனதா அலுவலகங்களிலும் வெற்றி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இனிப்பு வகைகள், பட்டாசுகள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

இன்று காலை முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியதில் இருந்து பா.ஜனதா தொண்டர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. வட மாநிலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் பா.ஜனதா தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றி விழாவை கொண்டாடினார்கள்.

டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வர வர பா.ஜனதா அலுவலகத்துக்கு தொண்டர்கள் வருகை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தலைவர்களும், பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வர தொடங்கினார்கள்.

இன்று மாலை பா.ஜனதா அலுவலகத்துக்கு மோடி, அமித்ஷா மற்றும் தலைவர்கள் வர உள்ளனர். அவர்கள் தொண்டர்கள் மத்தியில் பேசுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News