செய்திகள்

ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலால் 12 பேர் உயிர் இழப்பு

Published On 2019-05-22 05:36 GMT   |   Update On 2019-05-22 05:36 GMT
ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
நகரி:

ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியவில்லை.

இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வீட்டுக்குள் வெப்ப காற்று வருவதால் மக்கள் தூங்க முடியவில்லை.

வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விஜயநகரத்தில் 2 பேரும், விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, சித்தூர், கடப்பா மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகினர். மேலும் வெயிலால் பாதிக்கப்பட்ட 340 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டம் பாதிரி பேட்டில் 114.26 டிகிரி வெயில் பதிவானது

நெல்லூர் வெங்கடகிரியில் 113.36 டிகிரியும், சித்தூர் தொட்டம்பேடு, குண்டூர் மச்சவரத்தில் 113.18 டிகிரியும், கடப்பா மாவட்டத்தில் முட்டனூரில் 113 டிகிரியும் வெயில் கொளுத்தியது.


மேலும் மற்ற மாவட்டங்களில் 107.6 டிகிரி முதல் 113 டிகிரிவரை பதிவானது. இதனால் ஆந்திரா முழுவதும் வெயில் தாக்கம் உள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவில் வருகிற 25-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு வெப்ப காற்று கடுமையாக வீசும் என்று அம்மாநில வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த சமயத்தில் பல மாவட்டங்களில் 113 டிகிரி முதல் 118.4 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்றும் இதில் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளான குண்டூர், பிரகாசம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

அதேபோல இந்திய வானிலை மையமும் வெப்ப காற்று குறித்து எச்சரித்து உள்ளது. 25-ந்தேதி முதல் ராயலசீமாவில் வெப்ப காற்று கடுமையாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.

காற்றில் ஈரப்பதம் குறைந்ததே வெப்ப காற்று கடுமையாக வீச காரணமாகும்.

இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்படும் நிலையில் 5 நாட்கள் வெப்ப காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது பொது மக்களை பீதியடைய செய்துள்ளது.
Tags:    

Similar News