செய்திகள்

வாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா? - முன்னாள் ஜனாதிபதி வேதனை

Published On 2019-05-21 10:54 GMT   |   Update On 2019-05-21 10:54 GMT
வாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வேதனை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவுகளை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு இயந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. சமீபத்தில் தேனி, மதுரை தொகுதிகளில் அப்படி இயந்திரங்களை மாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.

மின்னணு இயந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றவும் சில இடங்களில் மின்னணு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும் முயற்சி நடப்பதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இதனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 
’வாக்காளர்களின் தீர்ப்பில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களை கவனித்து வருகிறேன். நமது ஜனநாயகத்தின் வேர்களுக்கு சவால்விடும் யூகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது.

மக்களின் தீர்ப்பு மிகவும் புனிதமானது. அதில் எள்முனையளவு சந்தேகத்துக்கும் இடமளித்துவிட கூடாது.

நமது நாட்டின் உயரிய அமைப்புகளின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் இந்த அமைப்புகளின் கருவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு அவற்றில் பணியாற்றுபவர்கள் கையில்தான் உள்ளது. 

தேர்தல் கமிஷன் என்னும் உயரிய அமைப்பின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்புணர்வு மற்றும் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்புக்கு தேர்தல் கமிஷன் பொறுப்பேற்க வேண்டும்.

அவர்கள் அவ்வாறு செய்து யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என தனது அறிக்கையில் பிரனாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News