செய்திகள்

3வது அணியில் சேர ஜெகன்மோகன் ரெட்டி தயக்கம் - சரத்பவார் சமரசத்தை ஏற்க மறுப்பு

Published On 2019-05-21 09:22 GMT   |   Update On 2019-05-21 09:22 GMT
இன்னும் கற்பனை வடிவத்திலேயே இருக்கும் எதிர்க்கட்சிகளின் 3வது அணியில் ஜெகன்மோகன் ரெட்டியை இழுக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கையின்போது பா.ஜனதா கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைத்து விடவேண்டும் என்று முயற்சிகள் நடந்து வருகிறது.

இதற்காக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அவருக்கு உதவியாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு பரம எதிரியாக திகழும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியையும் மாநில கட்சிகளின் அணியில் இடம் பெற செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சரத்பவார் கடந்த சில தினங்களாக ஜெகன்மோகன் ரெட்டியுடன் இது தொடர்பாக பேசி வருகிறார்.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு ஆதரவான நிலை பரவி இருப்பதால் சில மாநில கட்சி தலைவர்கள் காங்கிரசுடன் சேர தயங்கியபடி உள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டியும் 23-ந்தேதிக்கு பிறகு இதில் முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து இருக்கிறார்.

இப்போதே காங்கிரசுடன் கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று அவர் தயங்கியபடி உள்ளார்.

இதையறிந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று முதல் ஜெகன்மோகன் ரெட்டியை போனில் தொடர்பு கொள்ள முயன்று வருகிறார். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி அவருடன் பேசுவதை தவிர்த்து விட்டார்.

இதனால் ஜெகன்மோகன் ரெட்டி எத்தகைய முடிவை மேற்கொள்வார் என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் அவர் பா.ஜனதா பக்கம் சாய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News