செய்திகள்

வீட்டுக்குள் 20 ஆண்டாக சிறை வைக்கப்பட்ட பெண்

Published On 2019-05-20 10:14 GMT   |   Update On 2019-05-20 10:14 GMT
கொல்லம் அருகே வீட்டுக்குள் 20 ஆண்டாக சிறை வைக்கப்பட்ட பெண்ணை போலீஸ் துணையுடன் பெண்கள் கமி‌ஷன் நிர்வாகிகள் மீட்டனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவரை அறையில் பூட்டி சிறை வைத்திருப்பதாக பெண்கள் கமி‌ஷன் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

பெண்கள் கமி‌ஷன் நிர்வாகி ஷாகிதா கமல் இது பற்றி கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கவனத்திற்கு கொண்டுச் சென்றார். உடனே அவர் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்கும் படி அப்பகுதி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி கொல்லம் வழுதக்கால் பகுதி போலீசார் பெண் சிறை வைக்கப்பட்ட வீட்டை கண்டுபிடித்தனர்.

அந்த வீட்டுக்கு பெண்கள் கமி‌ஷன் நிர்வாகி ஷாகிதா கமலுடன் போலீசார் சென்றனர். அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளேச் சென்றனர். அங்கு சிறை வைக்கப்பட்ட பெண்ணை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

எலும்பும் தோலுமாக மெலிந்து காணப்பட்ட அந்த பெண்ணின் பெயர் லதா. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு லதாவை தவிக்க விட்டு சென்று விட்டார்.

இதனால் லதாவுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து லதாவின் சகோதரி அவரை வீட்டின் அருகே உள்ள அறையில் அடைத்து வைத்தார். கடந்த 20 ஆண்டுகளாக லதா அறையிலேயே தங்கி இருந்தார். தினமும் அவருக்கு ஒரு வேளை உணவு மட்டும் ஜன்னல் வழியாக கொடுக்கப்பட்டது.

இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மீட்கப்பட்ட லதா பத்னாபுரத்தில் உள்ள காந்தி பவனில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜாவுக்கு தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட லதாவுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து தரப்படும் என்று மந்திரி ஷைலஜா கூறினார். இச்சம்பவம் குறித்து பெண்கள் கமி‌ஷன் அளித்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீட்கப்பட்ட லதாவின் மகன் தற்போது செருப்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
Tags:    

Similar News