செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள்

சபரிமலைக்கு ரோப் கார் அமைக்கும் பணி தாமதம்

Published On 2019-05-18 08:42 GMT   |   Update On 2019-05-18 08:42 GMT
பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடமிருந்து அனுமதி கடிதம் கிடைக்காததால் சபரிமலைக்கு ரோப் கார் தூண்கள் அமைக்க மண் பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டப்படி பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு ரோப் கார் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. ரோப் கார் அமைக்கப்பட்டால் கோவிலுக்கு தேவையான பொருட்கள் ரோப்கார் மூலம் வேகமாக கோவிலுக்கு கொண்டு சென்று விடலாம் எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து பம்பை-சன்னிதானம் இடையே ரோப் கார் அமைக்க ஏதுவான பாதை ஆய்வு செய்யப்பட்டது.

ரோப் கார் செல்லும் பாதை கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் சரணாலயம் பகுதி வழியாக அமைக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கான ஆய்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது.

கேரள வனத்துறை அனுமதி வழங்கி விட்ட நிலையில் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகள் இதுவரை ரோப் கார் அமைப்பதற்கான அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே ரோப் கார் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்ய கொல்கத்தா குழுவினர் கடந்த 11-ந்தேதி கேரளா வந்தனர்.

சில நாட்கள் தங்கியிருந்த அவர்கள் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடமிருந்து அனுமதி கடிதம் கிடைக்காததால் ரோப் கார் தூண்கள் அமைக்க மண் பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் கொல்கத்தா திரும்பினர்.

சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்காக 14-ந்தேதி மாலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தினமும் விசே‌ஷ பூஜைகள் நடந்தன. ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டமும் அலைமோதியது.

கோவிலுக்கு இளம்பெண்கள் வருவார்கள் என்று தகவல் வெளியானதால் மலை பாதையில் இந்து அமைப்பினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை அடைக்கப்படுகிறது. இன்று சகஸ்கரகலசாபிஷேகம், அத்தாள பூஜை நடக்கிறது.

நாளை இரவு 10.30 மணிக்கு ஐயப்பனுக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது.


Tags:    

Similar News