செய்திகள்

தனி நபர் கருத்துக்கு பாஜக பொறுப்பேற்க முடியாது- அமித் ஷா

Published On 2019-05-17 08:03 GMT   |   Update On 2019-05-17 08:03 GMT
கோட்சேவை தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித் ஷா, தனி நபர் கருத்துக்கு பாஜக பொறுப்பேற்க முடியாது என கூறியுள்ளார்.
புது டெல்லி:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தின்போது கோட்சே ஒரு தீவிரவாதி என கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய பிரதேசம் மாநிலம் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.



இதையடுத்து பிரக்யாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான திக் விஜய் சிங் கூறுகையில், 'பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறுகையில், ‘ஆனந்த் குமார் ஹெக்டே, பிரக்யா தாகூர்,  நளின் கட்டேல் ஆகியோரின் கருத்துகளுக்கு பாஜக பொறுப்பேற்க முடியாது. இவை தனி நபரின் கருத்தாகும். பாஜக இதில் எதுவும் செய்ய முடியாது.

அவர்கள் சொன்ன கருத்துக்கு அவர்களே மன்னிப்பு கேட்டு விட்டார்கள். பாஜக அவர்கள் கருத்துகளை  தீவிரமாக எடுத்துக் கொண்டு, இதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளது. இந்த குழு, மூவரிடமும் அவர்கள் கருத்துகள் தொடர்பாக விளக்கம் கேட்டு 10 நாட்களுக்குள் அறிக்கையை பாஜகவிடம் சமர்ப்பிக்கும்’ என கூறினார்.  
Tags:    

Similar News