செய்திகள்

புதிய ஆட்சி அமைப்பதற்கு நீண்ட நாள் தேவைப்படாது- ராகுல் காந்தி

Published On 2019-05-16 10:21 GMT   |   Update On 2019-05-16 10:21 GMT
புதிய அரசு அமைப்பதற்கு நிச்சயமாக நீண்ட நாள் தேவைப்படாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களே கிடைத்திருந்தன.

இந்த தடவை காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 150 இடங்கள் வரைதான் கிடைக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த தடவை காங்கிரஸ் கட்சி ஆச்சரியப்படும் அளவுக்கு வெற்றிகளை குவிக்கும் என்று நம்பிக்கையோடு பேசி வருகிறார். மோடி நிச்சயமாக ஆட்சி அமைக்க முடியாது என்பதை அவர் உறுதிபட பொதுக்கூட்டங்களில் கூறி வருகிறார்.

இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில் ராகுல்காந்தி மனம் திறந்து கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்களது முடிவுக்காக நான் காத்திருக்கிறேன். அவர்கள் முடிவை தெரிந்த பிறகே எனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.

இந்த தேர்தலில் மோடி தோற்கடிக்கப்படுவது நிச்சயம். இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களால் மோடியை தோற்கடிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?

தற்போது இந்தியாவில் வேலை இல்லா பிரச்சனை, பொருளாதார சிக்கல்கள் அதிகம் உள்ளது. புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு இந்த பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து இந்தியாவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது.

உலகம் முழுக்க உள்ள அரசியல் வாதிகளை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் தங்கள் எதிராளிகளின் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தது தெரியும். அதுதான் அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

வெறுப்பு அரசியலால் எதையும் சாதிக்க இயலாது. பாராளுமன்றத்தில் நான், மோடியை கட்டி பிடித்து வாழ்த்தியது அந்த அடிப்படையில்தான். ஆனால் அதை பெரும்பாலானவர்கள் சரியான முறையில் உணரவில்லை.

23-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய ஆட்சி பற்றிய தெளிவான நிலை தெரிந்து விடும். புதிய ஆட்சி உடனடியாக அமைந்து விடும் என்றே நினைக்கிறேன். புதிய அரசு அமைப்பதற்கு நிச்சயமாக நீண்ட நாள் தேவைப்படாது.



எனது இலக்கு எல்லாம் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக நான் நீண்ட விவாதம் செய்ய வேண்டியதில்லை. மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டர்கள். எங்களது எண்ணங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர். 23-ந் தேதி அதற்கான விடை கிடைத்து விடும்.

ஆனால் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. எனக்கு இந்த கருத்து கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. மக்களின் எண்ணங்களை முழுமையாக நம்புகிறேன்.

பிரதமர் மோடி 5.55 லட்சம் கோடி ரூபாயை 15 பணக்காரர்களுக்கு கொடுத்து விட்டார். இதன் மூலம் காவலாளியே திருடனாக மாறியது எல்லோருக்கும் தெரியும். அந்த பணத்தை வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் கொடுக்கும் திட்டமானது வெளிப்படையானது. அதில் ஊழல் நடக்க வாய்ப்பில்லை. இந்த திட்டத்தின் கீழ் வேலை இல்லாதவர்களுக்கு பணம் நேரிடையாக கையில் கிடைக்கும். இடைத்தரகர்கள் பயன்பெற முடியாது.

ரபேல் போர் விமானம் ஒப்பந்த திட்டத்தால் பல இடைத்தரகர்கள் பயன் அடைந்தனர். அந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதைச்சொன்னால் மோடி கோபப்படுகிறார். கோபம் மோடியின் கண்களை மறைத்துள்ளது.

2014-ம் ஆண்டு மோடி வெற்றிபெற்றதும் மன்மோகன்சிங்கை சென்று பார்த்திருக்க வேண்டும். நீங்கள் அனுபவசாலி. உங்கள் உதவி எனக்கு தேவை என்று சொல்லி இருக்க வேண்டும். அதுபோல மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார் ஆகியோரிடமும் பேசி இருக்க வேண்டும்.

அப்படி அவர் செய்திருந்தால் அவரை தோற்கடிப்பது கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் அவர் நிறைய தவறுகள் செய்துள்ளார். மிகவும் ஆணவமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்டுள்ளார். யாருடைய கருத்தையும் கேட்பதில்லை. எனவே மோடியை தோற்கடிப்பது ஒன்றும் கஷ்டமில்லை.

தென் இந்தியாவில் மாறுபட்ட நிலையில் மக்கள் மனநிலை உள்ளது. இந்தியாவை நாக்பூரில் இருந்து சிலர் வழிநடத்துகிறார்கள் என்று தென் இந்திய மக்கள் நினைக்கிறார்கள். நான் தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது மக்களின் இந்த மன உணர்வை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

இது சரியல்ல என்பதை அன்றே உணர்ந்தேன். ஆந்திர மக்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காமல் தவிக்கிறார்கள். தென் இந்தியா புறக்கணிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நான் வயநாடு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டுள்ளேன்.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி என்னையும், எனது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஆனால் நான் பதிலுக்கு அதே போன்று விமர்சனம் செய்து பேசவில்லை. அவரது குடும்பத்தினரை குறை கூறி எதுவுமே சொன்னது இல்லை.

பிரதமர் என்ற முறையில் மோடியை நான் மதிக்கிறேன். அன்புதான் வெற்றி பெறும். வெறுப்பு அரசியலுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. தேர்தல் முடிந்த பிறகும் கூட அன்பு மட்டுமே தொடர்ந்து நீடிக்கும்.

இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
Tags:    

Similar News