செய்திகள்

உங்கள் ஆட்சியில் ஏழைகள் துன்பப்படுகிறார்கள்- நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் கண்டன கடிதம்

Published On 2019-05-14 10:09 GMT   |   Update On 2019-05-14 10:09 GMT
ஜெயிலில் இருந்தபடி லாலுபிரசாத் யாதவ் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பாட்னா:

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவர் தேர்தல் பிரசாரத்துக்காக ஜாமீன் பெற முயன்றார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஜெயிலில் இருந்தபடி லாலுபிரசாத் யாதவ் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கொள்கைகள், கோட்பாடுகள் என்று எதையும் பின்பற்றாத நீங்கள் (நிதிஷ்குமார்) ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க குறுக்கு வழியில் பயணித்து வருகிறீர்கள்.

தேர்தல் பிரசாரத்தில் என்னையும், எனது கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். உங்கள் தேர்தல் பிரசாரம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஏழைகளின் வாழ்க்கையில் இருளை நீக்கி வெளிச்சத்தை அளிக்கும் லாந்தர் விளக்கு சின்னத்தை நாங்கள் பெற்று இருக்கிறோம். அது அன்பையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் சின்னம்.

ஆனால் உங்கள் கட்சியின் சின்னமான அம்பு, வன்முறையின் ஆயுதம். பீகாரில் உங்கள் ஆட்சியில் ஏழை-எளிய மக்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.

அதை எதிரொலிப்பதாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இது தொடர்பாக நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் கூறும்போது, “சிறையில் இருக்கும் ஒருவர் தேர்தல் பிரசாரத்துக்காக கடிதம் எழுதுவது விதிமீறல். இது தொடர்பாக ராஞ்சி சிறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Tags:    

Similar News