செய்திகள்

பா.ஜனதா முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் - நிதின் கட்காரி நம்பிக்கை

Published On 2019-05-09 19:24 GMT   |   Update On 2019-05-09 19:24 GMT
பா.ஜனதா முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்தார். #BJP #NitinGadkari
புதுடெல்லி:

மத்திய சாலை போக்குவரத்து மந்திரியும், மூத்த பா.ஜனதா தலைவருமான நிதின் கட்காரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆதாயத்துக்காக மக்களை சமுதாய ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிரிப்பதுடன், சிறுபான்மையினர் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. பா.ஜனதா கட்சி பயங்கரவாதிகளுக்கு எதிரானது தானே தவிர முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் அறிவித்துள்ள நியாய் திட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை.

பா.ஜனதா பொதுச் செயலாளர் ராம் மாதவ், பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் என்று கூறியிருப்பதை நான் ஏற்கவில்லை. பா.ஜனதா தனித்தே 271 இடங்களில் வெற்றிபெறும்.

கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்திருக்கும் பணிகளின் அடிப்படையில் பா.ஜனதா முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். உண்மையை சொல்ல வேண்டுமானால், கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்பது எனது நம்பிக்கை. ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளில் செய்யாத பணிகளை 5 ஆண்டுகளில் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் நீங்கள் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு பேச்சு இருக்கிறதே? என்று கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் கட்சியின் விசுவாசமான ஒரு தொண்டன். பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கும், மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற லட்சியம் எப்போதும் இருந்தது இல்லை, இப்போதும் இல்லை.

பா.ஜனதா அரசில் எனக்கு மீண்டும் அதே துறைகள் ஒதுக்கப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதன்மூலம் முடிவுபெறாத பணிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்வேன். அதேசமயம் துறைகளை ஒதுக்குவது பிரதமரின் தனிப்பட்ட உரிமை.

இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.  #BJP #NitinGadkari 
Tags:    

Similar News