செய்திகள்

கேரள தலைமை தேர்தல் அதிகாரிக்கு பினராயி விஜயன் ஆதரவு

Published On 2019-05-08 09:43 GMT   |   Update On 2019-05-08 09:43 GMT
கள்ள ஓட்டு புகார் மீது நடவடிக்கை எடுத்த கேரள தலைமை தேர்தல் அதிகாரிக்கு பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார். #PinarayiVijayan
திருவனந்தபுரம்:

கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடந்தது.

பாராளுமன்ற தேர்தலின் போது காசர்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கள்ள ஓட்டு போட்டதாக புகார் கிளம்பியது. காங்கிரஸ் நிர்வாகிகள் இது தொடர்பாக கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனாவுக்கு புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இதில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

கேரள தலைமை தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்தது. புகாருக்கு ஆளான கம்யூனிஸ்டு கட்சியினர் வாக்குச்சாவடியில் இயலாதவர்களுக்கு வாக்களிக்க நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் மீது திட்டமிட்டு புகார் கொடுக்கப்பட்டது.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சியினர்தான் கள்ள ஓட்டு போட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூறினார்.

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், எதிர்க்கட்சியான காங்கிரசும் மாநில தேர்தல் கமி‌ஷன் மீது மாறி மாறி புகார் கூறி வந்த நிலையில் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், மாநில தேர்தல் கமி‌ஷனர் டீக்காராம் மீனாவுக்கு ஆதரவாக நேற்று கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் தேர்தலின்போது, கள்ள ஓட்டு போடுவதாக புகார் எழுவது வழக்கம். நமது ஜனநாயக நடைமுறை மிகவும் பாதுகாப்பானது. தவறுகள் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வகையில்தான் கேரள தலைமை தேர்தல் அதிகாரி அவரது கடமையை செய்துள்ளார்.

அவருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் குறுக்கே நிற்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். #PinarayiVijayan
Tags:    

Similar News