செய்திகள்

சினிமா பாணியில் பணம் பறிக்க முயன்ற வாலிபர் - செருப்பால் தாக்கி போலீசில் ஒப்படைத்த பெண்

Published On 2019-05-08 05:59 GMT   |   Update On 2019-05-08 05:59 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் பகுதியில் சினிமா பாணியில் பணம் பறிக்க முயன்ற வாலிபரை ஒரு பெண், செருப்பால் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ManArrested
ஜாம்ஷெட்பூர்:

திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பண மோசடி செய்வதற்காக வினோதமான முறைகளை கதாபாத்திரங்கள் கையாளும் விதங்கள் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம்.

அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றார்போல் உடை, நடை, பேச்சு என அனைத்தையும் மாற்றிக் கொண்டு நடிப்பவர்களை காணும்போது நமக்கே உண்மையான அதிகாரி போல் தான் தென்படுவார்கள். அவர்களை காணும்போது நாமும் இது தான் அவர்களது கதாபாத்திரம் என உறுதி செய்து விடுவோம்.

ஆனால், சிறிது நேரம் கழித்து படத்தின் கதை நகர நகர, பணத்திற்காக வேடமிட்டு  ஏமாற்றியுள்ளதும், கதாபாத்திரம் அதுவல்ல  என்பதும் தெரிய வரும். இந்த சினிமா பாணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.



ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்கு சென்று ஒருவர், தான் லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறி  சோதனை செய்துள்ளார். அதன்பின் அவரது கணவர் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்திருப்பதாகவும், அதனை மறைக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அவரது பேச்சில் இருந்த தெளிவையடுத்து, நிஜமாகவே இவர் அதிகாரிதான் என நம்பியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் தனது தோழிகளிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்கள் சந்தேகிக்கவே அந்த நபர் குறித்து விசாரித்து வந்துள்ளனர். இந்த விசாரணையில் அந்த நபர் பணத்திற்காக இவ்வாறு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த பெண் பணம் தருவதாக கூறி  மாங்கோ நகருக்கு தனியே வரச்சொல்லிவிட்டு, வீட்டில் இருந்து கிளம்பும்போது போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்த நபரை சரியான நேரத்திற்கு வந்து போலீசாரும் கைது செய்தனர். கைது செய்வதற்கு முன், தான் ஏமாற்றம் அடைந்த ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக போலீசார் முன்னதாகவே அந்த நபரை செருப்பால் சரமாரியாக தாக்கினார். #ManArrested   

Tags:    

Similar News