செய்திகள்
ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி

ஆட்டோ டிரைவருக்கு ரூ.1½ கோடியில் வீடு- பினாமி சொத்தில் சொகுசு வாழ்க்கை

Published On 2019-05-02 07:47 GMT   |   Update On 2019-05-02 09:32 GMT
பெங்களூரில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் நபர், அவரது பினாமி வாங்கிக் கொடுத்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் வசித்தது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #ITRaid
பெங்களூரு:

பெங்களூர் இ.சி.சி. சாலையில் பெரிய பங்களா வீடுகள் உள்ளன. இதில் ஒரு தனி பங்களாவை சுப்பிரமணி என்பவர் ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுத்து கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வாங்கி குடியேறினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி ஆட்டோ ஓட்டி பிழைத்து வந்தார். ஆனால் திடீரென்று அவர் கோடீஸ்வரர் ஆனது எப்படி? என்பது புரியாத புதிராக இருந்தது.

இதுகுறித்த புகார்கள் வருமான வரிதுறைக்கு சென்றது. இதையடுத்து சுப்பிரமணி பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து ரொக்கப்பணம் மற்றும் ரூ. 7 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றினார்கள்.


இவ்வளவு சொத்துக்கள் சம்பாதித்தது எப்படி என்பது பற்றி சுப்பிரமணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது 2 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு அறிமுகமான 72 வயது அமெரிக்க பெண்ணின் தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வருவதாகவும், அதன் மூலம் சொத்துக்களை வாங்கியதாகவும் கூறினார்.

இதையடுத்து சுப்பிரமணியிடம் பங்களாவை விற்றவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். 2013-ம் ஆண்டு சுப்பிரமணி தனது ஆட்டோவில் அமெரிக்க பெண் ஒருவரை அழைத்து வந்து பங்களாவை வாடகைக்காக பார்த்தார்.

மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டோம். அதன்பின் 2015-ம் ஆண்டு பங்களாவை விலைக்கு வாங்க சுப்பிரமணி ஆர்வம் காட்டினார். அவர் தலா ரூ.10 லட்சம் வீதம் 16 செக்குகள் கொடுத்து ரூ.1 கோடியே 60 லட்சத்துக்கு பங்களாவை வாங்கினார் என்றார்.

பங்களாவில் வசிக்க ஆரம்பித்த பிறகு சுப்பிரமணி ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திவிட்டார். இரவில் கிரிக்கெட் அல்லது பேட் மிட்டன் விளையாடுவது, நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது என்று பொழுதை கழித்து வந்துள்ளார். அவரது மகன், மகள் சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கூறும்போது, சுப்பிரமணி உள்ளூர் அரசியல்வாதிகளுடன் நன்கு பழக்கம் வைத்துள்ளார். அவர் வேலைக்கு சென்று நாங்கள் பார்த்ததே இல்லை என்றனர்.

இதற்கிடையே சுப்பிரமணி அரசியல்வாதியின் பினாமியாக செயல்பட்டுள்ளார் என்றும் வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #ITRaid
Tags:    

Similar News