செய்திகள்

மாயாவதி ஆட்சியில் அரசு சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு விற்றதில் ரூ.1,179 கோடி இழப்பு - சி.பி.ஐ. வழக்கு

Published On 2019-04-26 15:23 GMT   |   Update On 2019-04-26 15:23 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான 21 சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு விற்றதில் 1,179 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. இன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. #CBI #CBIregistersFIR #UPsugarmills
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முன்னாள் முதல் மந்திரி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக் காலத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்ததால் அரசுக்கு சொந்தமான 21 சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு விற்க அம்மாநில மந்திரிசபை கடந்த 2011-12 ஆண்டுகளுக்கு இடையில் ஒப்புதல் அளித்தது.

இப்படி அரசு சர்க்கரை ஆலைகளை 7 தனிநபர்களுக்கு விற்றதில் மாநில அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார். நல்லமுறையில் லாபத்தில் இயங்கிய 10 சர்க்கரை ஆலைகளை தனிப்பட்ட ஆதாயத்துக்காக மாயாவதி தனிநபர்களுக்கு தாரைவார்த்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள்,  21 சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு விற்றதில் 1,179 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக இன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.



போலியான மற்றும் தவறான ஆவணங்களின் மூலம் அரசு சர்க்கரை ஆலைகளை 7 தனிநபர்கள் அபகரித்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் இவற்றில் 6 விவகாரங்களில் பூர்வாங்க விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வழக்கில் அம்மாநிலத்தை சேர்ந்த எந்த அரசியல்வாதியோ, அரசு உயரதிகரிகளோ இதுவரை குற்றவாளிகளாக சேர்க்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #CBI #CBIregistersFIR  #UPsugarmills
Tags:    

Similar News