செய்திகள்

டிக்-டாக் செயலி மீதான தடை-24ம் தேதி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2019-04-22 07:24 GMT   |   Update On 2019-04-22 09:40 GMT
டிக்-டாக் செயலி மீதான தடை குறித்த வழக்கில், வரும் 24ம் தேதி உயர் நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #TikTok #SupremeCourt
புது டெல்லி:

சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.



இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு ஏப்ரல் 16ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், “டிக்-டாக் செயலியை 2 வகையாக கண்காணித்து வருகிறோம். இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்படமாட்டாது. கோர்ட்டு உத்தரவுக்கு பின்பு, பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு தடை விதித்து இருப்பதால், தற்போது டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், “இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே டிக்-டாக் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டு,  விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் இது குறித்து மதுரை ஐகோர்ட்டுக்கு அளித்த உத்தரவில், ‘டிக் டாக் செயலி மீதான தடை குறித்து நாளை மறுநாள் (ஏப்ரல் 24) மதுரை ஐகோர்ட் முடிவெடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் டிக் டாக் செயலி மீதான தடை தளர்ந்ததாக கருதப்படும்’ என கூறியுள்ளது. #TikTok #SupremeCourt 
Tags:    

Similar News