செய்திகள்

இலங்கையில் 5 ஜேடிஎஸ் கட்சியினர் மாயம், 2 பேர் பலி - முதல்வர் குமாரசாமி இரங்கல்

Published On 2019-04-22 06:46 GMT   |   Update On 2019-04-22 06:46 GMT
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் கர்நாடகா மாநிலத்தின் ஜேடிஎஸ் கட்சியினர் 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. #HDKumaraswamy #SrilankanBlasts
பெங்களூரு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.

இந்நிலையில் இன்று சுஷ்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை 5 இந்தியர்கள் பலியாகியுள்ளனர் எனவும் கூறினார்.



இது குறித்து கர்நாடகா முதல் மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம்(ஜேடிஎஸ்) கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி கூறியதாவது:

கொழும்புவிற்கு சுற்றுலா மேற்கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்த 7 தொண்டர்கள், நேற்று நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு  சம்பவத்திற்கு பின்னர்  மாயமானதாக தகவல் கிடைத்தது. இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

அவர்கள் குறித்த தகவல் அறிய இந்திய தூதருடன் தொடர்பில் இருந்தேன். இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உயிரிழந்த 5 இந்தியர்களுள் 2 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என அறிவித்திருந்தார். இதைக் கேட்டு மிகவும் வருந்தினேன்.

இந்த தாக்குதலில் மறைந்த கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய இருவரும் எனக்கு நெருக்கமான தொண்டர்கள் ஆவர். இருவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தாருடன் என்றும் நான் துணை நிற்பேன்.  

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து இலங்கை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. #HDKumaraswamy #SrilankanBlasts

Tags:    

Similar News